பள்ளி செல்ல பாதையின்றி ஆபத்துப் பயணம் செய்யும் மாணவர்கள்
பள்ளி செல்ல பாதையின்றி ஆபத்துப் பயணம் செய்யும் மாணவர்கள்
UPDATED : டிச 22, 2014 12:00 AM
ADDED : டிச 22, 2014 11:37 AM
ஆனைமலை: ஆனைமலை நெல்லித்துறை - மன்னம் பகுதியில், பனப்பள்ளம் சிற்றோடையில் அமைக்கப்பட்ட மாற்றுப் பாதையும், சில தினங்களுக்கு முன் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது. இதனால், ஆற்றை கடந்து சாகச பயணம் செல்லும் நிலைக்கு, பொதுமக்கள், பள்ளி மாணவர்கள் ஆளாக்கப்பட்டுள்ளனர்.
ஆனைமலை கோட்டூர் பேரூராட்சிக்கு உட்பட்ட நெல்லித்துறை மன்னம் பகுதியில் 50 குடும்பங்களை சேர்ந்த 200க்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் மற்றும் 200க்கும் அதிகமான விவசாய குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதிக்கு ஆழியாறு பூங்கா எதிரிலிருந்து செல்லும் கிராம இணைப்பு சாலை மட்டுமே போக்குவரத்திற்கான ஒரே வழித்தடம் ஆகும். இப்பகுதியில், பனப்பள்ளம் சிற்றோடையில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் ஒரு கோடி ரூபாய் மதிப்பீட்டில் பாலம் கட்டும் பணி துவங்கி நடைபெற்று வருகிறது.
இதற்காக பழைய வழித்தடத்தை துண்டித்து விட்டு அருகில் மாற்றுப்பாதை அமைத்தனர். கடந்த சில தினங்களாக பீடர் கால்வாயில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால், பனப்பள்ளம் சிற்றோடையின் குறுக்கே இருந்த மாற்றுப்பாதை அடித்து செல்லப்பட்டு விட்டது. இதனால் கிராமத்துக்கு செல்லும் பாதை துண்டிக்கப்பட்டு விட்டது.
இப்பகுதி மக்கள் கூறுகையில், "புதிய பாலம் கட்டி முடிக்கும் வரையில், வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட மாற்று பாதையை சீரமைத்து தர வேண்டும். இந்த பகுதியுள்ள மாணவர்கள் பள்ளிக்கு செல்ல தண்ணீரில் இறங்கி நீந்தி செல்ல வேண்டியுள்ளது. திடீரென்று வெள்ளப்பெருக்க ஏற்பட்டால் குழந்தைகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்படும் அபாயம் உள்ளது. எனவே அதிகாரிகள் விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றனர்.
