பள்ளி பாடத்திட்டத்திலேயே தமிழ் இசை பாடங்களை சேர்க்க கோரிக்கை
பள்ளி பாடத்திட்டத்திலேயே தமிழ் இசை பாடங்களை சேர்க்க கோரிக்கை
UPDATED : டிச 23, 2014 12:00 AM
ADDED : டிச 23, 2014 11:11 AM
தமிழ் இசை சங்கத்தின், பண் ஆராய்ச்சியின் 65வது கூட்டம், சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில் நடைபெற்றது. நான்கு நாட்கள் நடைபெறும் இந்த கூட்டத்தை, தஞ்சை, தமிழ் பல்கலைக் கழக துணைவேந்தர் திருமலை துவக்கி வைத்து பேசினார்.
நிகழ்ச்சியில், சங்க தலைவரும், ஓய்வுபெற்ற நீதிபதியுமான பு.ரா.கோகுலகிருஷ்ணன், சங்க செயலர் ஏ.சி.முத்தையா, சீர்காழி சிவசிதம்பரம், ஏ.கே.சி.நடராசன், சம்பந்தம், மீனாட்சி சித்தரஞ்சன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
வரவேற்புரை நிகழ்த்திய பு.ரா.கோகுலகிருஷ்ணன் பேசியதாவது: ஓதுவார் பரம்பரை இல்லையென்றால், தமிழ் இசை காணாமல் போயிருக்கும். தமிழ் இசையில் பட்டம் பெற்றாலும், இசை விழாக்களில், சமஸ்கிருதம் மற்றும் தெலுங்கை விட தமிழை அதிகம் பேர் பாடுவதில்லை. தமிழ் இசையை வளர்க்க இளைஞர்கள் மத்தியில் ஆர்வமும், உணர்வும் பெருக வேண்டும்.
சென்னையில் திருவையாறு மட்டுமல்லாமல், சென்னையில் சீர்காழி இசை நிகழ்ச்சி மூலம், தமிழ் இசை பரப்பப்பட வேண்டும். தமிழ் இசையை வளர்க்க, பள்ளிகளிலேயே தமிழ் இசையை கற்பிக்க வேண்டும். அதற்கான அருமையான பாடல்கள், சிந்தனை அனைத்தும், நாலடியார், அவ்வையார் மற்றும் திருக்குறளில் ஏராளமாக உள்ளன. இவ்வாறு அவர் பேசினார்.
தஞ்சை தமிழ் பல்கலைக்கழக துணைவேந்தர் திருமலை பேசியதாவது: தமிழ் இசை தனித்து நிற்கவில்லை. அது வாழ்க்கையோடு இணைந்து உள்ளது. பல்வேறு நிலப்பகுதிகளில் வாழ்ந்த தமிழர்கள் தங்களை அடையாளப்படுத்த இசை, பண், யாழினை பயன்படுத்தியுள்ளனர். அதை நாம் மறந்து விட்டோம்.
ஆனால் இன்று, தொலைக்காட்சியில் வரும் விளம்பரத்தின் பின்னணி இசையை கேட்டு, குழந்தைகள் குதுகலிக்கின்றன. தமிழ் இசையை மீட்க, இசையோடு இலக்கியத்தையும் இணைக்க வேண்டும். காலத்திற்கேற்ப, இரண்டு ஆண்டுகளிலேயே, பாடத்திட்டங்களில் போதிய மாற்றம் செய்யப்பட வேண்டும். பள்ளி பாடத்திலேயே தமிழ் இசையின் அடிப்படையை புகுத்த வேண்டும்.
கனடா நாட்டில் தமிழ் இசையை பயில, ஆர்வம் கொண்டு பலர் என்னிடம் முறையிட்டு வருகின்றனர். ஆனால் பல்கலைக்கழக சட்டம் அதற்கு இடம் தராததால், அதற்கான முயற்சி, கடித போக்குவரத்து வாயிலாக நடைபெற்று வருகிறது. இவ்வாறு அவர் பேசினார்.
