தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/கல்லூரி மாணவர்கள் மோதலை தடுக்கும் நடவடிக்கையில் ஓரளவு முன்னேற்றம்!

கல்லூரி மாணவர்கள் மோதலை தடுக்கும் நடவடிக்கையில் ஓரளவு முன்னேற்றம்!

கல்லூரி மாணவர்கள் மோதலை தடுக்கும் நடவடிக்கையில் ஓரளவு முன்னேற்றம்!


UPDATED : டிச 25, 2014 12:00 AM

ADDED : டிச 25, 2014 01:59 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 25, 2014 12:00 AM ADDED : டிச 25, 2014 01:59 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னையில், மாநில கல்லூரி, புதுக்கல்லூரி, நந்தனம் பச்சையப்பன், தியாகராஜா ஆகிய ஐந்து கல்லூரி மாணவர்களிடையே, அடிக்கடி பேருந்து வழித்தடங்களில் மோதல்கள் நிகழ்ந்து வருகின்றன. இவற்றை கட்டுப்படுத்துவதற்காக, கல்வி, போக்குவரத்து, காவல் துறை ஆகிய மூன்று துறைகள் சார்ந்த அதிகாரிகள் கொண்ட குழுவின் மூன்றாவது கூட்டம், சென்னை மாநில கல்லூரியில், நேற்று நடந்தது. 

ஒருவர்கூட வரவில்லை 

அதில், மாநில கல்லூரி உள்ளிட்ட ஐந்து கல்லூரிகளின் முதல்வர்களில் ஒருவர் கூட பங்கேற்கவில்லை. குறிப்பாக, தியாகராஜா கல்லூரியில் இருந்து பிரதிநிதி ஒருவர் கூட வரவில்லை. மாறாக, தியாகராஜா கல்லூரி தவிர, மற்ற நான்கு கல்லூரிகளில் இருந்து, பொறுப்பு முதல்வர்கள் பங்கேற்றனர். ஆனால், அவர்கள் சுதந்திரமாக எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. 

முதல்வர்களிடம் நடந்த நிகழ்வுகளை தெரிவிப்பதாக கூறினர். அதேபோல், கல்லூரி கல்வி இயக்குனர், தேவதாஸ், கண் அறுவை சிகிச்சை காரணமாக கலந்து கொள்ளவில்லை. அதனால், கல்வி துறை இணை இயக்குனர், மண்டல துணை இயக்குனர் ஆகியோரும், தங்கள் கருத்துக்களை கூற மறுத்து, நிகழ்வுகளை இயக்குனரிடம் தெரிவிப்பதாக கூறினர். 

கல்வி துறை இணை இயக்குனர் உமாராணி, மண்டல துணை இயக்குனர் காந்திமதி, திருவல்லிக்கேணி துணை கமிஷனர் பீர் முகமது, போக்குவரத்து மேலாளர் உள்ளிட்ட சொற்பமானோர் மட்டுமே பங்கேற்றனர். இதனால், முத்தரப்பு கூட்டம் உப்புச்சப்பின்றி, எந்தவித பயனுமின்றி முடிந்தது. எனினும், கடந்த இரண்டு மாதங்களாக நடந்த கண்காணிப்பு நடவடிக்கைகள் குறித்து தெரிவிக்கப்பட்டது.

மாநகர போக்குவரத்து அதிகாரிகள், கூட்டத்தில் பேசியதாவது: கல்லூரி வேலைநாட்களில், நெரிசல் நேரங்களான, காலை 9:00 முதல், 11:00 மணி வரை, பிற்பகல் 1:00 முதல் 3:00 மணி வரை, சிறப்பு குழு, கடந்த இரண்டு மாதங்களாக பேருந்து வழித்தடங்களில் மாணவர்களை கண்காணித்து வந்தது. அந்த குழுவில், ஓய்வுபெற்ற நீதிபதி, ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., போக்குவரத்து துறையை சேர்ந்த அதிகாரிகள் உள்ளனர். 

அந்த காலகட்டத்தில், பிரச்னைக்குரிய வழித்தடங்களில், 236 பேருந்துகள் கூடுதலாக இயக்கப்பட்டன. ஆயினும், குறிப்பிட்ட பேருந்தில் மட்டுமே, மாணவர்கள் அதிக அளவில் ஏறினர். பேருந்தில் இடமிருந்தும், படிக்கட்டு பயணத்தை மேற்கொண்டனர். 

கண்காணிப்பு போலீஸ் உதவியோடு, அவர்களை படம் பிடித்தவுடன், அவர்கள் பேருந்துக்குள் செல்ல துவங்கினர். இந்த கண்காணிப்பு தொடர்கிறது. இப்போது, நிலைமை கட்டுக்குள் உள்ளது. இனி, படிக்கட்டு பயணத்தை தடுக்க, கதவுகள் உள்ள பேருந்துகளை மட்டும் இயக்குவதாக உள்ளோம். 

காவல்துறை அதிகாரிகள் கூறியதாவது: பிரச்னைக்குரிய வழித்தடங்களை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். அதற்காக, கூடுதல் போலீசாரை, கல்லூரி வளாகம், பேருந்து நிறுத்தம் உள்ளிட்ட இடங்களில் பணி அமர்த்தியுள்ளோம். 

பிரச்னைக்குரிய மாணவர்களை அடையாளம் கண்டு, அவர்களின் தொடர்பு எண் உட்பட அனைத்து தகவல்களையும் சேகரித்து வைத்துள்ளோம். பிரச்னை வருவது போல் தெரிந்தால், அவர்களை எங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியும். அதற்கு, கல்லூரி முதல்வர்கள் முழு ஒத்துழைப்பு தருகின்றனர். 

கல்லூரி முதல்வர்கள் (பொறுப்பு) கூறியதாவது: பொறுப்பாசிரியர் முறை அமல்படுத்தப்பட்டு, குறிப்பிட்ட எண்ணிக்கையுள்ள மாணவர்களின் விவரங்களை சேகரித்து, அவர்களின் பிரச்னைகள் குறித்து அறிந்து, அதற்கேற்ப நடவடிக்கை எடுக்க, அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு வருகிறது. மேலும், மாணவர்களின் தனித்திறமைகளை ஊக்குவிக்கும் போட்டிகள் நடத்தப்பட உள்ளன. 

நீக்க நடவடிக்கை 

அடையாள அட்டை இல்லாத மாணவர்களை, கல்லூரிக்குள் அனுமதிப்பதில்லை. 75 சதவீதத்திற்கு குறைந்த வருகைப்பதிவு உள்ளவர்களை தேர்வெழுத அனுமதிப்பதில்லை. மாணவர்கள் கூடும் இடங்களில், கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு வருகின்றன. சட்டம் - ஒழுங்கு பாதிப்புக்கு உள்ளாகும் மாணவர்களை உடனடியாக, கல்லூரியில் இருந்து நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இப்போது நிலைமை சீரடைகிறது. இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us