முதல்வர் கோப்பைக்கான தடகளம் மற்றும் குழு விளையாட்டுப் போட்டிகள்
முதல்வர் கோப்பைக்கான தடகளம் மற்றும் குழு விளையாட்டுப் போட்டிகள்
UPDATED : டிச 31, 2014 12:00 AM
ADDED : டிச 31, 2014 10:58 AM
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் திருப்பூர் பிரிவு சார்பில், மாவட்ட அளவிலான முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டி நடைபெற உள்ளது. வரும் 3ல் குழு விளையாட்டு போட்டி, 4ல் தடகளப் போட்டிகள் நடைபெற உள்ளன.
குழு விளையாட்டில், மாவட்ட கபடி கழக மைதானத்தில் கபடி; நஞ்சப்பா மாநகராட்சி பள்ளியில் கூடைப்பந்து, வாலிபால் மற்றும் கால்பந்து (ஆண்கள்) போட்டிகள்; மைக்ரோகிட்ஸ் பள்ளியில் பெண்கள் கால்பந்து; உடுமலை நேதாஜி மைதானத்தில் ஹாக்கி; பிரண்ட்லைன் பள்ளியில் நீச்சல்; மாவட்ட டென்னிஸ் சங்க மைதானத்தில் டென்னிஸ்; நடராஜ் காம்ப்ளக்சில் டேபிள் டென்னிஸ்; மோகன்ஸ் பேட்மின்டன் அகாடமியில் இறகுபந்து போட்டி; செஞ்சுரி பவுண்டேசன் பள்ளியில் தடகளப் போட்டிகள் நடத்தப்பட உள்ளன.
போட்டிகளில் பங்கேற்பவர்கள் 25 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். தடகளம் மற்றும் நீச்சல் போட்டிகளில் முதலிடம் பெறுபவர்கள் மட்டுமே, மண்டல போட்டிக்கு தகுதி பெறுவர். குழு போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் வீரர், வீராங்கனைகள், தேர்வுக்குழுவினரால் தேர்வு செய்யப்பட்டு, மண்டல போட்டிக்கு அனுமதிக்கப்படுவர்.
ஆண்கள் பிரிவு தடகளத்தில் 100, 800, 5000 மீ., ஓட்டம்; 110 மீ., தடை தாண்டுதல், உயரம் தாண்டுதல், நீளம் தாண்டுதல், டிரிபிள் ஜம்ப், குண்டு எறிதல், வட்டு எறிதல், ஈட்டி எறிதல் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்படும். பெண்கள் பிரிவு தடகளத்தில் 100, 400, 3000 மீ., ஓட்டம், 100 மீ., தடை தாண்டுதல், உயரம் தாண்டுதல், நீளம் தாண்டுதல், டிரிபிள் ஜம்ப், குண்டு எறிதல், வட்டு எறிதல், ஈட்டி எறிதல் போட்டிகள் நடத்தப்படும்.
போட்டியாளர்கள், ஊக்க மருந்து பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவர். முதல் பரிசு 1,000 ரூபாய்; 2ம் பரிசு 750; 3ம் பரிசு 500 ரூபாய் வழங்கப்படும். தடகளத்தில் ஒரு நபர், ஒரு பிரிவில் மட்டுமே பங்கேற்க வேண்டும். மாநில அளவில் தனிநபர் மற்றும் குழுப்போட்டியில் முதலிடம் பெறுவோருக்கு, ஒரு லட்சம் ரூபாய், 2ம் பரிசு பெறுவோருக்கு 75 ஆயிரம் ரூபாய், 3ம் பரிசாக 50 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்.
பங்கேற்க விரும்புவோர், ஜன., 2க்குள் பதிவு செய்ய வேண்டும். விவரங்களுக்கு, மாவட்ட விளையாட்டு அலுவலரை, 74017 03515, 0421 - 2244 899 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
