104 பெண் சாதனையாளர்களின் பேட்டி இடம்பெற்ற புதிய புத்தகம்
104 பெண் சாதனையாளர்களின் பேட்டி இடம்பெற்ற புதிய புத்தகம்
UPDATED : ஜன 01, 2015 12:00 AM
ADDED : ஜன 01, 2015 11:29 AM
பெங்களூரு: ‘சட்டத்தால் மட்டுமே, அனைத்தையும் சாதித்துவிட முடியாது,” என்று முதல்வர் சித்தராமையா கூறினார்.
கர்நாடக கூட்டுறவுத் துறை அமைச்சர், மஹாதேவ பிரசாத் மனைவி கீதா. இவர் எழுதிய, ’104 உமன் வில் இன்ஸ்பயர்’ என்ற புத்தகத்தை, பெங்களூரு பாரதிய வித்யா பவனில், முதல்வர் சித்தராமையா வெளியிட்டு பேசியதாவது:
பெண்கள் சுதந்திரம், சமநிலை போன்ற விஷயங்கள், புராண காலத்திலிருந்தே துவங்கியவை. அப்போதிலிருந்து ஆமை வேகத்தில் வந்து, ஒரு கட்டத்தை எட்டியுள்ளது. அனைத்து துறைகளிலும் பெண்கள், சாதனையில் முன்னணியில் உள்ளனர். பெண்கள் புறக்கணிக்கப்படுவதை கட்டுப்படுத்தவும், அவர்களின் சுதந்திரத்துக்காகவும் சட்டம் கொண்டு வர வேண்டும் என, புத்தகத்தில் கருத்து தெரிவிக்கப்பட்டு உள்ளது.
சட்டத்தால் மட்டுமே எதையும் சாதித்துவிட முடியாது. இதுபற்றி சமுதாயத்தில், விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். கீதா மஹாதேவ பிரசாத், அரசியல்வாதி மஹாதேவ பிரசாத்தின் மனைவியாக இருந்து, இலக்கியத்தில் ஆர்வம் காட்டியிருப்பது பாராட்டத்தக்கது.
இதற்காக நேரம் ஒதுக்கி, 104 பெண் சாதனையாளர்களை சந்தித்து, அவர்களை பேட்டி கண்டு, புத்தகம் எழுதியுள்ளார். இது மட்டுமின்றி, வெவ்வேறு, ஐந்து புத்தகங்களையும் எழுதியுள்ளார். வரும் நாட்களில், இன்னும் அதிகமான புத்தகங்களை, அவர் எழுத வேண்டும். இவ்வாறு, முதல்வர் பேசினார்.
சாதனை படைக்க போராட்டம்:
“ஆணாதிக்கம் கொண்ட இந்த சமுதாயத்தில், பெண்கள் பிரபலமாவதற்கு, சாதனை படைப்பதற்கு பெரிதும் போராட வேண்டியுள்ளது. அதை, இப்புத்தகத்தில் விவரித்து உள்ளேன். கர்நாடகத்திலுள்ள, பெண் சாதனையாளர்கள் பற்றிய புத்தகத்தை, ஆங்கிலத்தில் எழுதியிருப்பது, ஏன் என்று பலரும் கேட்கின்றனர். 2013ல், மைசூரு பல்கலைக் கழகத்தில் பிஎச்.டி., பட்டம் பெற்றேன்.
ஆங்கிலத்தில் இலக்கியம் படித்தேன்; 533 பக்கம் கொண்ட புத்தகத்தை ஆங்கிலத்தில் எழுதியுள்ளேன்; இப்புத்தகத்துக்கு, விஜயபுரா சித்தேஸ்வரா சுவாமிகள், மதிப்புரை எழுதிஉள்ளார்; இதை, கன்னடத்தில் மொழி பெயர்க்கவும் ஏற்பாடு செய்துள்ளேன்; இப்புத்தகம் எழுதுவதற்கு, என் கணவர் பெரிதும் உதவியாக இருந்தார்” என்றார் புத்தக ஆசிரியர் கீதா.
