பதிவு உயர்வுக்கான கலந்தாய்வில் பங்கேற்க இயலாத நிலை; டாக்டர்களுக்கு சிக்கல்
பதிவு உயர்வுக்கான கலந்தாய்வில் பங்கேற்க இயலாத நிலை; டாக்டர்களுக்கு சிக்கல்
UPDATED : ஜன 01, 2015 12:00 AM
ADDED : ஜன 01, 2015 11:28 AM
அரசு டாக்டர் பதவி உயர்வுக்கான இடங்களின் எண்ணிக்கை அதிகரித்தாலும், பட்டியலில் பெயர் இல்லாததால், கலந்தாய்வில் பங்கேற்க முடியாமல் டாக்டர்கள் திரும்பினர்.
பட்டியல் வெளியீடு:
தமிழகத்தில், அரசு டாக்டர்களுக்கான பதவி உயர்வு கலந்தாய்வு, மருத்துவக் கல்வி இயக்ககத்தில், நேற்று முன்தினம் துவங்கியது. 27 துறைகளின் கீழ், பதவி உயர்வுக்கு தகுதியானோர் பட்டியலையும் வெளியிட்டது.
’இதில் எல்லா இடங்களையும் காட்டவில்லை. 2015 மார்ச் வரையிலான எல்லா இடங்களும் சேர்க்க வேண்டும்’ என, அரசு டாக்டர்கள் சங்கத்தினர், உயரதிகாரிகளை சந்தித்து வலியுறுத்தினர். ’அதன்படியே நடத்தப்படும்’ என, அதிகாரிகள் உறுதி அளித்தனர். திட்டமிட்டபடி, டாக்டர் பதவி உயர்வு காலந்தாய்வு, நேற்று துவங்கியது. டாக்டர்கள் கோரிக்கை ஏற்கப்பட்டு, கூடுதல் இடங்கள் கொண்ட பட்டியல் ஒட்டப்பட்டிருந்தது.
ஏமாற்றம்:
ஆனால், கூடுதல் இடங்களுக்கு ஏற்ப, பதவி உயர்வுக்கு தகுதியானோர் பட்டியல் வெளியிடப்படவில்லை. இதனால், பதவி உயர்வுக்கு வாய்ப்பிருந்தும், கலந்தாய்வில் பங்கேற்க முடியாமல், பலர் ஏமாற்றத்துடன் திரும்பினர். ஏற்கனவே பட்டியலில் பெயர் இருந்தோர் மட்டும், கலந்தாய்வில் பங்கேற்றனர்.
அரசு டாக்டர்கள் சங்க பொதுச் செயலர் பாலகிருஷ்ணன் கூறுகையில், ”இடங்களை கூடுதலாக்கியதற்கு ஏற்ப, தகுதியானோர் பட்டியல் வெளியிடாததால், சிக்கல் ஏற்பட்டு உள்ளது. விடுபட்டோர், நிரந்தர பதவி உயர்வு கலந்தாய்வு மீண்டும் நடத்த வேண்டும். அதில் காலியிடம் இருந்தால், தற்காலிக பதவி உயர்வு கலந்தாய்வை நடத்தலாம்,” என்றார்.
