ஏப்., 4க்கு பிறகே மாணவர் சேர்க்கையை துவக்க தனியார் பள்ளிகளுக்கு அறிவுறுத்தல்
ஏப்., 4க்கு பிறகே மாணவர் சேர்க்கையை துவக்க தனியார் பள்ளிகளுக்கு அறிவுறுத்தல்
UPDATED : ஜன 04, 2015 12:00 AM
ADDED : ஜன 04, 2015 12:04 PM
திருப்பூர்: "வரும் கல்வியாண்டுக்காக மாணவர் சேர்க்கையை, ஏப்., 4க்கு பிறகே துவக்க வேண்டும் என, தனியார் பள்ளிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பொதுத்தேர்வு முடிந்த பின், ஏப்., மற்றும் மே மாதங்களில் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடத்த அனுமதிக்கப்படுகிறது. ஆனால், பல மெட்ரிக் பள்ளிகளில், ஜன., மாதத்திலேயே மாணவர் சேர்க்கை துவக்கப்படுகிறது. கல்வியாண்டு முடிவடையாத நிலையில் தனியார் பள்ளிகள் மாணவர் சேர்க்கையை நடத்துவதும், பெற்றோர்களிடம் கல்வி கட்டணம் வசூலிப்பதும், விதிமுறை மீறலாக உள்ளது.
பள்ளிகளில் இடப்பற்றாக்குறை, பள்ளிகளுக்குள் போட்டி ஏற்படுகிறது. இதை தவிர்க்கும் விதமாக, கல்வியாண்டு துவக்கத்தில் மட்டுமே தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடத்த வேண்டும் என, கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.
இதுதொடர்பாக, மாவட்ட மெட்ரிக் பள்ளி ஆய்வாளர்களுக்கு, மெட்ரிக் பள்ளிகள் இயக்குனரகம் அறிக்கை அனுப்பியுள்ளது. அதில், தமிழகத்தில் உள்ள எந்த மெட்ரிக் பள்ளியிலும், ஏப்., 4க்கு முன் மாணவர் சேர்க்கை நடைபெறக்கூடாது. அதன் பின்பே, மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பம் வழங்கி, சேர்க்கையை மேற்கொள்ள வேண்டும். இதை மீறும் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, எச்சரிக்கப்பட்டுள்ளது.
