இந்திய ஜூனியர் கபடி அணிக்கு சிவகங்கை மாணவர் தேர்வு
இந்திய ஜூனியர் கபடி அணிக்கு சிவகங்கை மாணவர் தேர்வு
UPDATED : ஜன 07, 2015 12:00 AM
ADDED : ஜன 07, 2015 11:57 AM
திருப்புத்தூர்: இந்திய ஜூனியர் கபடி அணிக்கு சிவகங்கை மாவட்டம் உறங்கான்பட்டியைச் சேர்ந்த பாஸ்கரன், 18, தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
கேரளா காசர்கோடில் தேசிய ஜூனியர் கபடிப் போட்டி கடந்த வாரம் நடந்தது. அதில் தமிழக ஜூனியர் அணி களம் இறங்கியது. பீகார், பஞ்சாப், இமாச்சல் பிரதேசம், அரியானா மாநில அணிகளை வென்று இறுதிப் போட்டியில் இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணைய அணியுடன் மோதி இரண்டாம் இடம்பெற்றது.
தமிழக அணிக்கு பாஸ்கரன் தலைவராக இருந்தார். இப்போட்டியில் சிறப்பாக விளையாடிய அவர், தேசிய ஜூனியர் கபடி அணிக்கு தேர்வாகி உள்ளார். கரூர் ஏ.வி.சி. கல்லூரியில் பி.ஏ., படித்து வருகிறார். இவரை குஜராத் ஓ.என்.ஜி.சி., நிறுவனம் தனது அணிக்கு தேர்வு செய்துள்ளது.
பாஸ்கரன் கூறியதாவது: நான் 5 வயதாக இருக்கும்போது தந்தை இறந்து விட்டார். தாயார் கஷ்டப்பட்டு வளர்த்தார். 11ம் வகுப்பு படிக்கும்போது கபடி விளையாடத் துவங்கினேன். மாவட்ட, மாநில அணிகளில் விளையாடினேன். பயிற்சியாளர் ஆனந்தகிருஷ்ணன், செயலாளர் ஜோதிமணிக்கு நன்றி, என்றார்.
