தேசிய கூடைபந்து போட்டியில் சென்னை பல்கலை அணி வெற்றி
தேசிய கூடைபந்து போட்டியில் சென்னை பல்கலை அணி வெற்றி
UPDATED : ஜன 16, 2015 12:00 AM
ADDED : ஜன 16, 2015 02:20 PM
சோழிங்கநல்லுார்: அகில இந்திய அளவிலான, கூடைபந்து போட்டியில், சென்னை பல்கலை அணி வெற்றி பெற்றது.
சத்யபாமா பல்கலைக்கழகம் சார்பில், அகில இந்திய அளவிலான, பல்கலைக்கழக அணிகளுக்கு இடையே, ஆண்கள் கூடைபந்து போட்டி, சோழிங்கநல்லுாரில், ஜன. 12ல் துவங்கி நடந்து வருகிறது. நான்கு மண்டல அணிகள் பங்கேற்று உள்ளன. ஒரு மண்டலத்திற்கு நான்கு அணிகள் என, நான்கு மண்டலத்திலும் இருந்து, 16 பல்கலைக்கழக அணிகள் மோதுகின்றன.
லீக் சுற்று போட்டிகளில், சென்னை பல்கலைக்கழக அணி, 86-55 என்ற புள்ளிக்கணக்கில், மகாத்மா காந்தி காசி பல்கலை (வாரணாசி) அணியை தோற்கடித்தது. எஸ்.பி.எம்., ஜெயின் பல்கலை (பெங்களூரு) அணி, 61-48 என்ற புள்ளிக்கணக்கில், புர்த்வான் பல்கலை (புர்த்வான், மேற்கு வங்கம்) அணியை வீழ்த்தியது.
ரவிசங்கர் சுக்லா பல்கலை (ராய்பூர்) அணி, 74-39 என்ற புள்ளிக்கணக்கில், சிவாஜி பல்கலை (கோளப்பூர்) அணியை வென்றது. குருனானக் தேவ் பல்கலை (அமிர்தசரஸ்) அணி, 81-65 என்ற புள்ளிக்கணக்கில், பாரதியார் பல்கலை (கோவை) அணியை தோற்கடித்தது.
சத்யபாமா பல்கலை (சென்னை) அணி, 86-76 என்ற புள்ளிக்கணக்கில், ரவிசங்கர் சுக்லா பல்கலை (ராய்பூர்) அணியை வென்றது. ஜாமியா பல்கலை (டெல்லி) அணி, 70-49 என்ற புள்ளிக்கணக்கில், சாவித்ரிபாய் பல்கலை( புனே) அணியை தோற்கடித்தது. இன்றும், நாளையும் காலிறுதி போட்டிகள் நடக்க உள்ளன.
