இந்தியர்கள் பிரிட்டனில் படித்து, பணியாற்ற எந்தக் கட்டுப்பாடும் இல்லை: பிரிட்டிஷ் அதிகாரி
இந்தியர்கள் பிரிட்டனில் படித்து, பணியாற்ற எந்தக் கட்டுப்பாடும் இல்லை: பிரிட்டிஷ் அதிகாரி
UPDATED : ஜன 21, 2015 12:00 AM
ADDED : ஜன 21, 2015 10:48 AM
கிரேட் பிரிட்டன் செயல்திட்டம் குறித்த கல்வி கருத்தரங்கு, பிரிட்டிஷ் கவுன்சில் சார்பில், புதுச்சேரியிலுள்ள அதிதி ஓட்டலில் நடக்க உள்ளது.
இந்த கருத்தரங்கு குறித்து, டில்லியிலுள்ள பிரிட்டிஷ் ஹைகமிஷனர் அலுவலகத்தின், மினிஸ்டர் கவுன்சிலர் ஆன்ட்ரூ சோபர், நிருபர்களிடம் கூறியதாவது: கல்வி மற்றும் திறன்கள் பிரிவில், பிரிட்டன் உலகளாவிய பிரபலத் தன்மையைக் கொண்டுள்ளது. உலகின் முதல்நிலை பல்கலைக்கழகங்கள் 6ல், நான்கு பிரிட்டனில் உள்ளன.
உலகம் முழுவதும் உள்ள பணியமர்த்துனர்களால், பிரிட்டன் பட்டம் பெரிதும் மதிக்கப்படுகிறது. கடந்த 2013ம் ஆண்டில், விசாவிற்கு விண்ணப்பித்த இந்திய மாணவர்களில் 84 சதவீதம் பேரால் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது, எங்கள் பல்கலைக்கழகங்கள்தான்.
இது, இந்திய மாணவர்களை நாங்கள் வெகுவாக வரவேற்பதற்கு சான்றாகும். இந்தியர்கள் பிரிட்டன் வந்து படிக்கவும், பட்டம் பெற்றபிறகு பணியாற்றவும், எத்தகைய கட்டுப்பாட்டு அளவும் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.
பிரிட்டிஷ் கவுன்சிலின் தென்னிந்தியாவிற்கான இயக்குனர் மெய்குவெய் பார்கர் நிருபர்களிடம் கூறும்போது, "பிரிட்டனில் பயிலும் சர்வதேச மாணவர்களில், இந்திய மாணவர்கள் குறிப்பிடத்தக்க முக்கியத்துவத்தை கொண்டுள்ளனர். இதை மனதில் கொண்டு, அடுத்த இரண்டு ஆண்டுகளில், அதிக செவெனிங் ஸ்காலர்ஷிப் மற்றும் குளோபல் ஸ்காலர்ஷிப்புகளை அதிகம் பெறும் நாடாக, இந்தியாவை மாற்றுவதை, இலக்காக கொண்டுள்ளோம்.
கடந்த 10 ஆண்டுகளில், 2,50,000க்கும் மேற்பட்ட இந்திய மாணவர்கள், பிரிட்டனில் கல்வி பயின்றுள்ளனர்" என்றார். தொடர்ந்து, கிரேட் பிரிட்டன் ஸ்காலர்ஷிப்கள் குறித்த வழிகாட்டியை, மினிஸ்டர் கவுன்சிலர் ஆன்ட்ரூ சோபர் வெளியிட்டார்.
