நிதி ஒதுக்கப்படாததால் மரத்தடியில் படிக்கும் மாணவர்கள்
நிதி ஒதுக்கப்படாததால் மரத்தடியில் படிக்கும் மாணவர்கள்
UPDATED : ஜன 22, 2015 12:00 AM
ADDED : ஜன 22, 2015 10:02 AM
மதுரை: அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டத்தில்(ஆர்.எம்.எஸ்.ஏ.,) தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளுக்கு நிதி ஒதுக்காததால் மாணவர்கள் மரத்தடி நிழலில் படிக்கும் நிலையுள்ளது.
அரசு நடுநிலைப் பள்ளிகளை உயர் நிலையாக தரம் உயர்த்தி ஒன்பது, பத்தாம் வகுப்புகளுக்கான அடிப்படை வசதி, ஆய்வகங்கள் கூடுதல் வகுப்பறைகள் மேற்கொள்ள 2009- 2010ல் இத்திட்டம் அறிமுகமானது. அந்த ஆண்டு 200 பள்ளிகள் தரம் உயர்த்தப்பட்டன. மத்திய மாநில அரசுகள் (75:25 சதவீதம்) சார்பில் தலா ரூ.50 லட்சம் ஒதுக்கின.
கட்டுமான மதிப்பு ரூ.1 கோடி வரை தேவைப்பட்டது. கட்டடப் பணிகளை தலைமையாசிரியர் கண்காணிக்க வேண்டும் என்ற முடிவுக்கு எதிர்ப்பு கிளம்பியது. இதனால் பொதுப்பணித் துறையிடம் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது. இதற்கிடையில் 2010-11ல் 344, 2011-12ல் 710, 2012-13ல் 100, 2013-2014ல் 50, 2014-2015ல் 50 என 1254 பள்ளிகள் உயர்நிலையாக தரம் உயர்த்தப்பட்டன. கட்டடங்கள், ஆய்வகங்கள் கட்ட நிதி ஒதுக்கவில்லை. ஒன்பது, பத்தாம் வகுப்பு மாணவர்கள் மரத்தடி நிழலில் படிக்கும் நிலையுள்ளது.
உயர்நிலை மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் சங்க பொது செயலாளர் சாமிசத்தியமூர்த்தி கூறியதாவது: மத்திய, மாநில அரசுகளுக்குள் நிலவிய இணக்கமில்லாத சூழ்நிலையால் தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளுக்கு நிதி ஒதுக்கீடு இல்லை. ஏற்கனவே ஒதுக்கப்பட்ட நிதி மற்றும் மதிப்பீட்டிற்கு இடையே ஏற்பட்ட முரண்பாட்டாலும் பள்ளிகளில் பணிகள் முடியவில்லை. மத்திய அரசிடம் இதற்கான நிதியை பெற்று மதிப்பீட்டுத் தொகையை முறைப்படுத்தி பணிகளை விரைந்து துவக்க வேண்டும், என்றார்.
