மாணவர் தொடர் போராட்டம் - மேட்டுப்பாளையம் வனக் கல்லூரிக்கு காலவரையற்ற விடுமுறை
மாணவர் தொடர் போராட்டம் - மேட்டுப்பாளையம் வனக் கல்லூரிக்கு காலவரையற்ற விடுமுறை
UPDATED : ஜன 30, 2015 12:00 AM
ADDED : ஜன 30, 2015 01:02 PM
மேட்டுப்பாளையம்: மாணவர்களின் தொடர் போராட்டத்தால், மேட்டுப்பாளையம் வனக் கல்லூரிக்கு காலவரையற்ற விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் வனக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில், வனவியல் துறையில், பி.எஸ்.சி.,- எம்.எஸ்.சி.,- எம்.பில்., ஆகிய பட்டப்படிப்பு வகுப்புகள் பயிற்றுவிக்கப்படுகின்றன. 213 மாணவ, மாணவியர் படிக்கின்றனர்.
வனச்சரகர் பணியில், 100 சதவீதமும், வனவர் காலியிடத்தில் வனவியல் பட்டதாரிகளுக்கு இட ஒதுக்கீடும் கோரி, இக்கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து, காலவரையற்ற ஸ்டிரைக்கை துவக்கியுள்ளனர்.
இரண்டாவது நாளான நேற்று மாணவ, மாணவியர் மரக்கன்றுகளுக்கு ராக்கி கட்டி, நூதன போராட்டம் செய்தனர். மாணவர்கள் கூறுகையில், "வனத்தை பற்றி படிக்கும் நாங்கள், மரம், செடிகளை சகோதரராக பாவிக்கிறோம் என்பதற்காக இந்த ராக்கியை கட்டியுள்ளோம். கோரிக்கை அடங்கிய மனுவை, யானை முகாம் நிறைவு விழாவுக்கு வந்த, உணவுத்துறை அமைச்சர் காமராஜரிடம் கொடுத்துள்ளோம். தீர்வு கிடைக்கும்வரை தொடர்ந்து போராடுவோம்" என்றனர்.
கல்லூரிக்கு விடுமுறை
இதற்கிடையே, கல்லூரிக்கு காலவரையற்ற விடுமுறை விடப்படுவதாக, நிர்வாகம் அறிவித்துள்ளது. விடுதியும் மூடப்பட்டுள்ளது. எனினும், மாணவ, மாணவியர் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
