பள்ளியை விரிவுபடுத்த புறம்போக்கு நிலத்தை கல்வித்துறைக்கு வழங்க வேண்டுகோள்
பள்ளியை விரிவுபடுத்த புறம்போக்கு நிலத்தை கல்வித்துறைக்கு வழங்க வேண்டுகோள்
UPDATED : பிப் 10, 2015 12:00 AM
ADDED : பிப் 10, 2015 11:08 AM
திருப்பூர்: வாலிபாளையம் உயர்நிலைப் பள்ளியை விரிவுபடுத்த, புறம்போக்கு நிலத்தை கல்வித்துறைக்கு வழங்க வேண்டும், என, பெற்றோர் - ஆசிரியர் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
பொதுமக்களிடம் குறைகேட்கும் கூட்டம், திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது; கலெக்டர் கோவிந்தராஜ் தலைமை வகித்தார். டி.ஆர்.ஓ., பிரசன்னா ராமசாமி, தனி துணை கலெக்டர் வாசுகி உள்ளிட்டோர், மக்களிடம் இருந்து மனுக்களை பெற்றுக்கொண்டனர்.
அதன் விவரம்
* சட்ட பஞ்சாயத்து இயக்க மாவட்ட அமைப்பாளர் இளஞ்செழியன் கொடுத்த மனுவில், "பல்லடம், எலவந்தி ஊராட்சியின் கீழுள்ள 8 கிராமங்களுக்கு, கடந்த 6 மாதமாக கிராம நிர்வாக அலுவலர் இல்லை. அப்பணியிடத்தை நிரப்ப வேண்டும்" என, தெரிவிக்கப்பட்டுள்ளது.
* இடுவம்பாளையம், காமாட்சியம்மன் காலனி மக்கள் அளித்த மனுவில், "கடந்த 10 ஆண்டுகளாக ரோடு, சாக்கடை கால்வாய் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லை. அவற்றை செய்து தர வேண்டும்" என, தெரிவித்துள்ளனர்.
* திருப்பூர் வாலிபாளையம் மாநகராட்சி பள்ளி பெற்றோர் - ஆசிரியர் சங்க நிர்வாகிகள் கொடுத்த மனுவில், "இப்பள்ளி, 2011-12ல் உயர்நிலைப்பள்ளியானது. கட்டடம் கட்டுவதற்கு எஸ்.எஸ்.ஏ., மூலம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால், இடமில்லை. புறம்போக்கு நிலத்தை, பள்ளிக்கு ஒதுக்க வேண்டும்" என, கோரியுள்ளனர்.
* கணபதிபாளையம் மக்கள் கொடுத்த மனுவில், "கணபதிபாளையத்தில் ஏலச்சீட்டு நடத்திய சிவக்குமார், பகவதி ஆகியோர் மீது, பல்லடம் போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது. தலைமறைவாக உள்ள அவர்களிடம் இருந்து, பாதிக்கப்பட்ட 8 பேருக்கு சேர வேண்டிய, 13.75 லட்சம் ரூபாயை மீட்டுத்தர வேண்டும்" என, தெரிவித்துள்ளனர்.
* வெள்ளக்கோவில் பகுதியினர், கையில் மண் வெட்டி ஏந்திச்சென்று அளித்த மனுவில், "உச்சவரம்பு திட்டத்தின் கீழ், குட்டப்பாளையம், வெள்ளக்கோவில், கம்பளியம்பட்டி, குண்டடம் உள்ளிட்ட பகுதிகளில் மீட்கப்பட்டுள்ள உபரி நிலங்களை பிரித்து, அருந்ததிய மக்களுக்கு தலா 2 ஏக்கர் வீதம் அளிக்க வேண்டும்" என வலியுறுத்தினர்.
* முத்தணம்பாளையம், இந்திரா காலனி மக்கள் கொடுத்த மனுவில், "இந்திரா காலனியில் பொதுக்கழிப்பிடம், அங்கன்வாடி, நூலக வசதியில்லை. பட்டா வழங்க வருவாய்த்துறையினர் தீர்மானித்துள்ள காலியிடத்தை, "ரிசர்வ் சைட்டுகளாக மாற்றி, பொதுத்தேவைக்கு பயன்படுத்த வேண்டும்" என்று தெரிவித்துள்ளனர்.
* தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கம் அளித்த மனுவில், "அமராவதி ராஜவாய்க்கால் பாசனத்துக்கு உட்பட்ட நஞ்சை பூமியில், வீட்டுமனை அமைக்கப்படுகிறது. ஊராட்சி நிர்வாகமும் அனுமதி தந்துள்ளது. விளைநிலங்கள் வீட்டுமனையானால், விளைச்சல் பாதிக்கும். மனையிடங்களுக்கு அனுமதி வழங்காமல், விவசாயத்தை பாதுகாக்க வேண்டும், என்று தெரிவித்துள்ளார்.
நெருப்பெரிச்சல் பகுதியில் வசிக்கும் திருநங்கைகள் 16 பேருக்கு, புதிய ரேஷன் கார்டுகளை, கலெக்டர் வழங்கினார். குறைகேட்பு கூட்டத்துக்கு வந்திருந்த அனைவருக்கும், நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது. டெங்கு காய்ச்சல் வராமல், உடல் நலனை பாதுகாத்துக் கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டது.
