பள்ளியில் அட்டகாசம் செய்யும் சமூக விரோதிகளை கண்டுகொள்ளாத காவல்துறை
பள்ளியில் அட்டகாசம் செய்யும் சமூக விரோதிகளை கண்டுகொள்ளாத காவல்துறை
UPDATED : பிப் 13, 2015 12:00 AM
ADDED : பிப் 13, 2015 03:38 PM
பெ.நா.பாளையம்: கவுண்டம்பாளையம் ஹவுசிங் யூனிட் அரசு நடுநிலைப் பள்ளி வளாகத்தில், சமூக விரோதிகளின் அட்டகாசம் நாளுக்குநாள் அதிகரித்து வருவதால், ஆசிரியர்கள் அச்சமடைந்துள்ளனர்.
கவுண்டம்பாளையம் ஹவுசிங் யூனிட் அரசு நடுநிலைப்பள்ளி வளாகத்தில் சத்துணவு மையம், அனைவருக்கும் கல்வி திட்டத்தில் மாற்றுத்திறன் குழந்தைகளுக்கான பகல் நேர பராமரிப்பு மையம் ஆகியனவும் செயல்படுகின்றன. இங்கு பயிலும் குழந்தைகளுக்காக, 1.50 லட்ச ரூபாய் செலவில் புதிய கழிப்பிடங்கள், குடிநீர் குழாய் ஆகியன அமைக்கப்பட்டன.
நள்ளிரவில் பள்ளி வளாகத்தில் புகுந்த கும்பல் மாணவர்களின் பயன்பாட்டுக்காக இருந்த குடிநீர் குழாய்களின் டேப்புகளை திருடி சென்றனர். பின், அங்கிருந்த பிளாஸ்டிக் குடிநீர் தொட்டியை மைதானத்தில் போட்டு சேதப்படுத்தினர். புதிய கழிப்பிடங்களையும் சேதப்படுத்தினர்.
ஆசிரியர்கள் கூறுகையில், "ஏற்கனவே, மாற்றுத்திறன் மாணவர்கள் பயன்படுத்தும் சாய்வு வழியில் உள்ள இரும்பு கைப்பிடிக் குழாய்களை சேதப்படுத்தினர். சத்துணவு கூடத்துக்குள் புகுந்த கும்பல், அங்கு வைக்கப்பட்டிருந்த முட்டைகளை திருடிச் சென்றும், நுாற்றுக்கணக்கான மூட்டைகளை சுவற்றில் அடித்தும் சேதப்படுத்தினர்.
தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் ஆயிரக்கணக்கான ரூபாய் செலவில் வைத்திருந்த குடிநீர் ஆர்.ஒ., பிளான்ட் தொடர்பான கருவிகளை, சமூக விரோதிகள் உடைத்து, அட்டகாசம் செய்தனர். தற்போது, புதியதாக அமைக்கப்பட்ட குடிநீர் குழாய்களையும் திருடிச் சென்றனர். இச்சம்பவம் குறித்து பலமுறை போலீசாருக்கு தகவல் தெரிவித்தும், நடவடிக்கை இல்லை" என்றனர்.
