கல்வி வளர்ச்சி நாளை சிறப்பாக கொண்டாடிய அரசு பள்ளிகளை தேர்வுசெய்ய கல்வித்துறை உத்தரவு
கல்வி வளர்ச்சி நாளை சிறப்பாக கொண்டாடிய அரசு பள்ளிகளை தேர்வுசெய்ய கல்வித்துறை உத்தரவு
UPDATED : பிப் 18, 2015 12:00 AM
ADDED : பிப் 18, 2015 10:46 AM
உடுமலை: நடப்பு கல்வியாண்டில், கல்வி வளர்ச்சி நாளை சிறப்பாக கொண்டாடிய அரசு பள்ளிகளை விரைவில் தேர்வு செய்வதற்கு, கல்வித்துறை இயக்ககம் உத்தரவிட்டுள்ளது.
நடப்பு கல்வியாண்டில், காமராஜர் பிறந்த தினம், அனைத்து பள்ளிகளிலும் கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடுவதற்கு, கல்வித்துறை உத்தரவிட்டது. இதன் அடிப்படையில், சிறப்பாக கொண்டாடிய சிறந்த தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளை தேர்வு செய்து அனுப்ப வேண்டும் என மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கு கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
உத்தரவில், 2014 - 2015ம் ஆண்டு காமாராஜர் பிறந்த நாளை கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடுவதற்கு, 24 லட்ச ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்நிதியின் மூலம் அனைத்து மாவட்டங்களிலும், கல்வி வளர்ச்சி நாளை சிறப்பாக கொண்டாடிய ஒரு தொடக்கப்பள்ளி மற்றும் ஒரு நடுநிலைப் பள்ளியை தேர்வு செய்து, பரிசுத்தொகை வழங்க வேண்டும் என மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பள்ளிகளை தேர்வு செய்வதற்கான வழிமுறைகளை பின்பற்றி, 16ம்தேதிக்குள் தேர்வு செய்யப்பட்ட பள்ளிகளின் பெயர் மற்றும் விபரங்கள் உள்ளடக்கிய பட்டியலை கல்வித்துறை இயக்ககத்திற்கு அனுப்ப வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
