தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ஆசிரியர் நியமனத்தை நிறுத்தும்படி பாரதியார் பல்கலைக்கு உத்தரவு: குழப்பும் துணைவேந்தர்

ஆசிரியர் நியமனத்தை நிறுத்தும்படி பாரதியார் பல்கலைக்கு உத்தரவு: குழப்பும் துணைவேந்தர்

ஆசிரியர் நியமனத்தை நிறுத்தும்படி பாரதியார் பல்கலைக்கு உத்தரவு: குழப்பும் துணைவேந்தர்


UPDATED : பிப் 18, 2015 12:00 AM

ADDED : பிப் 18, 2015 11:57 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : பிப் 18, 2015 12:00 AM ADDED : பிப் 18, 2015 11:57 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை: புதிய ஆசிரியர் நியமனத்தை நிறுத்தி வைக்கும்படி, கோவை, பாரதியார் பல்கலைக்கு, தமிழக உயர் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

கோவையில் அமைந்துள்ள பாரதியார் பல்கலையின் கீழ், கோவை, நீலகிரி, திருப்பூர் மற்றும் ஈரோடு ஆகிய மாவட்டங்களில் உள்ள 80க்கும் மேற்பட்ட கலை அறிவியல் கல்லுாரிகள் உட்பட, 100க்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்கள் இணைக்கப்பட்டுள்ளன. இந்த பல்கலையின் தற்போதைய துணைவேந்தராக இருப்பவர் ஜேம்ஸ் பிச்சை. பல்கலையில் பணி நியமனம் தொடர்பாக, பல்வேறு புகார்கள் எழுந்துள்ளன.

இந்நிலையில், ஐந்து துறைகளில் ஆசிரியர்களை நியமிப்பதற்கு, பல்கலை நிர்வாகம் மீண்டும் நடவடிக்கை எடுத்தது. முதற்கட்டமாக, மனித மரபியல் துறை மற்றும் கல்வியியல் துறையில் ஆசிரியர்கள் 12 பேரை நியமிப்பதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதற்காக விண்ணப்பித்தவர்களுக்கு, நேர்காணலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

மனித மரபியல் துறைக்கு இன்றும், நாளையும், கல்வியியல் துறைக்கு, வரும் 23 மற்றும் 24 தேதிகளிலும் நேர்காணல் நடப்பதாக இருந்தது. ஆனால், ஏற்கனவே பல்வேறு சர்ச்சைகள் உள்ள நிலையில், புதிய நியமனத்தை நிறுத்தி வைக்குமாறு தமிழக அரசின் உயர்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. பாரதியார் பல்கலை துணைவேந்தர் ஜேம்ஸ் பிச்சைக்கு, இத்துறையின் செயலர் அபூர்வா, இதுதொடர்பாக கடிதம் அனுப்பியுள்ளார்.

அவர் அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: பல்கலை மானியக்குழுவின் 11வது திட்டத்தில் தற்காலிகமாக நியமிக்கப்பட்டவர்கள் தாக்கல் செய்த மனு தொடர்பாக, இடைக்கால தடை உள்ளது. இந்த வழக்குகள், கோர்ட்டில் இன்னும் நிலுவையில் உள்ளன. தங்கள் பணி நியமனத்தை வரன்முறைப்படுத்துமாறு, அவர்கள் கோரியுள்ளனர்.

இந்த விவகாரத்தை பல்கலை நிர்வாகம், சரியாகக் கையாளாத காரணத்தால், கோர்ட் அவமதிப்பு மனுவை அரசு எதிர்கொள்ள வேண்டியிருந்தது. எனவே, இந்த பிரச்னைக்கு தீர்வுகாண வேண்டும். அதுவரை, புதிதாக எந்தப் பணிக்கும் ஆட்களை தேர்வு செய்யக்கூடாது; அரசுக்கு தர்மசங்கடம் ஏற்படாத வகையில், நேர்காணலை தள்ளி வைக்க வேண்டும். இவ்வாறு அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசின் இந்த உத்தரவு, பல்கலை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த, 13ம் தேதியன்று, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆனால், இன்று நடக்கும் நேர்காணலை ரத்து செய்வது தொடர்பாக, நேற்று வரை எந்த அறிவிப்பும், பல்கலை நிர்வாகத்தால் வெளியிடப்படவில்லை. இதனால், இன்று நேர்காணல் நடக்குமா, நடக்காதா என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது.

பாரதியார் பல்கலை துணை வேந்தர் ஜேம்ஸ்பிச்சையிடம் கேட்டபோது, நானும், பல்கலை பதிவாளரும், இப்போதும் (நேற்று மாலை) தலைமைச்செயலகத்தில் தான் இருக்கிறோம். இப்படி ஓர் உத்தரவு வந்திருப்பதாக, நீங்கள் தான் தகவல் சொல்கிறீர்கள். எனக்கு இதுவரை, வாய்மொழியாகக் கூட தகவல் வரவில்லை. அதனால், நேர்காணலை நிறுத்துமாறு, பதிவாளருக்கு நான் எந்த அறிவுறுத்தலையும் வழங்கவில்லை, என்றார்.

எதுதான் உண்மையோ?

தமிழக அரசின் உயர் கல்வித்துறை செயலர் அபூர்வா அனுப்பியுள்ள இந்த கடிதம், கடந்த மூன்று நாட்களாக, பல்கலை வட்டாரத்திலேயே பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. ஆனால், நேற்று வரையிலும் இப்படி ஒரு உத்தரவே வரவில்லை என்று கூறி, பேரதிர்ச்சியை அளிக்கிறார் துணைவேந்தர் ஜேம்ஸ் பிச்சை. இதுபற்றி கேட்பதற்காக, உயர் கல்வித்துறை செயலர் அபூர்வாவை தொடர்பு கொண்டபோது, அவர் மீட்டிங்கில் இருப்பதாக மெசேஜ் மட்டும் அனுப்பினார். கடைசிவரையிலும் அவரிடம் பதில் பெற முடியவில்லை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us