UPDATED : பிப் 19, 2015 12:00 AM
ADDED : பிப் 19, 2015 11:56 AM
பெங்களூரு: கல்வி உரிமை சட்டத்தின் கீழ், தனியார் பள்ளிகளில், இலவச ’சீட்’ ஒதுக்கப்படுவதால், பி.பி.எம்.பி., பள்ளிகளில், மாணவர் சேர்க்கை குறைந்துள்ளது. இதனால், ஏழு பி.பி.எம்.பி., பள்ளிகள் மூடப்படும் அபாயத்தில் உள்ளன.
கிரேட்டர் பெங்களூரு மாநகராட்சி (பி.பி.எம்.பி.,) நிர்வாகத்தின் கீழ், 89 நர்சரி பள்ளிகள், 13 ஆரம்ப பள்ளிகள், 33 உயர்நிலைப் பள்ளிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இவற்றில், மல்லேஸ்வரம் பிட் காலனி, காட்டன்பேட்டை பள்ளிகள் உள்ளிட்ட ஏழு பள்ளிகளில், மாணவர் எண்ணிக்கை, 50க்கும் குறைவாக உள்ளன. இந்த பள்ளிகளை மூட, பி.பி.எம்.பி., தீர்மானித்துள்ளது.
’சீட்’ இலவசம்:
கர்நாடகா முனிசிபல் கார்ப்பரேஷன் விதிமுறைப்படி, 50 மாணவர்களுக்கும் குறைவான எண்ணிக்கை உள்ள பள்ளிகள் மூடப்பட்டு, அங்கு படிக்கும் மாணவர்களும், ஆசிரியர்களும் அருகிலுள்ள, பி.பி.எம்.பி., பள்ளிகளுக்கு மாற்ற உரிமையுள்ளது. தற்போது, கல்வி உரிமை சட்டத்தின் கீழ், தனியார் பள்ளிகளிலும் இலவசமாக சீட் ஒதுக்கப்படுவதால், பி.பி.எம்.பி., மற்றும் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைந்துள்ளது. தனியார் பள்ளிகளுக்கு இணையாக பி.பி.எம்.பி., மற்றும் அரசு பள்ளிகளும் தரத்தை உயர்த்தி, போட்டி போட வேண்டிய நிலை உருவாகி உள்ளது.
ஆர்வமில்லை:
பா.ஜ., கவுன்சிலர் ஒருவர் கூறுகையில், ’பல ஆசிரியர்கள், பாடம் நடத்துவதற்கே, சோம்பல் காட்டுகின்றனர். 16 மணி நேரம் பாடம் நடத்துவதற்கு பதில், ஆறு மணி நேரமே பாடம் நடத்துகின்றனர். இவர்களை முதலில் மாற்றுவது நல்லது’ என்றார்.
எதிர்க்கட்சி தலைவர் மஞ்சுநாத ரெட்டி கூறியதாவது: அதிகாரிகளும், கவுன்சிலர்களும், பி.பி.எம்.பி., பள்ளிகள் மீது ஆர்வம் காட்டுவதில்லை. தங்கள் வார்டில் உள்ள பொருளாதார ரீதியில், பின்தங்கிய குடும்ப மாணவர்களை சேர்க்கும்படி, கவுன்சிலர்கள் ஊக்குவிக்க வேண்டும்.
கண்காணிப்பு கமிட்டி:
மும்பை மாநகராட்சி, இன்ஜினியரிங், மெடிக்கல் கல்லூரிகளை நடத்துகிறது. இங்கு, அது போன்று நம்மால் நடத்த முடியாதா? மாறாக, பள்ளிகளை மூட வேண்டிய அவசியம் என்ன? கிராமப்புறங்களில் பள்ளிகளில் குழந்தைகளை சேர்க்க, ஆசிரியர் மற்றும் பள்ளி வளர்ச்சி கண்காணிப்பு கமிட்டி, வீடு வீடாக சென்று கல்வியின் அவசியத்தை உணர்த்தி, மாணவர்களை சேர்க்கின்றனர். இங்கு அதுபோன்ற முயற்சி எதுவுமில்லை. இவ்வாறு, அவர் குற்றம்சாட்டினார்.
பி.பி.எம்.பி., மாணவர் பள்ளி எண்ணிக்கை
மல்லேஸ்வரம் பிட் காலனி 24
காட்டன்பேட்டை 29
காந்தி நகர் 44
தயானந்த நகர் 21
பன்னப்பா பார்க் 27
ஹலசூரு மர்பி டவுன் 49
சிவாஜி நகர் பிராட்வே 49
