புதிய அரசு மருத்துவக் கல்லூரிக்கு ரூ.12.25 கோடியில் உபகரணங்கள்
புதிய அரசு மருத்துவக் கல்லூரிக்கு ரூ.12.25 கோடியில் உபகரணங்கள்
UPDATED : பிப் 19, 2015 12:00 AM
ADDED : பிப் 19, 2015 12:28 PM
சென்னையில் புதிதாக அமைந்துள்ள, ஓமந்தூரார் அரசினர் தோட்ட மருத்துவக் கல்லூரிக்கு, 12.25 கோடி ரூபாயில் உபகரணங்கள் வாங்க, தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. வரும் கல்வி ஆண்டில், எம்.பி.பி.எஸ்., படிப்பில், 100 மாணவர்கள் சேர்க்கப்பட உள்ளனர்.
சென்னை, ஓமந்தூரார் தோட்ட வளாகத்தில், கடந்த தி.மு.க., ஆட்சிக் காலத்தில், பிரமாண்டமாக கட்டப்பட்ட புதிய தலைமைச் செயலக கட்டடம், தற்போது, அரசு பல்நோக்கு மருத்துவமனையாக செயல்பட்டு வருகிறது. இதன் இணைப்பாக, புதிய அரசு மருத்துவக் கல்லூரி துவங்கப்பட்டு உள்ளது.
இதற்காக, 200 கோடி ரூபாயில், கட்டடங்கள் கட்டும் பணி முடிவடையும் நிலையில் உள்ளது. தற்போது, கல்லூரிக்கு தேவையான உபகரணங்கள் வாங்க, தமிழக அரசு, 12.25 கோடி ரூபாய்க்கு அனுமதி அளித்துள்ளது. வரும் கல்வி ஆண்டில், கல்லூரி செயல்படும் வகையில், பணிகளை விரைந்து முடிக்க, அரசு உத்தரவிட்டு உள்ளது.
இதுகுறித்து, மருத்துவக் கல்வி இயக்கக அதிகாரி ஒருவர் கூறுகையில், ’மருத்துவக் கல்வி இயக்ககத்தின், 20வது கல்லூரியாக, இந்த கல்லூரி செயல்படும். அதற்கேற்ப, பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன; கட்டமைப்பு வசதிகளும் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. ”இந்திய மருத்துவக் கவுன்சில் ஆய்வு முடிந்துள்ளது. வரும் கல்வியாண்டில், எம்.பி.பி.எஸ்., படிப்புக்கு, 100 மாணவர்கள் சேர்க்கப்படுவர்,” என்றார்.
