தமிழ்நாடு வனச்சீருடை பணியாளர்களுக்கான எழுத்துத்தேர்வு
தமிழ்நாடு வனச்சீருடை பணியாளர்களுக்கான எழுத்துத்தேர்வு
UPDATED : பிப் 21, 2015 12:00 AM
ADDED : பிப் 21, 2015 11:50 AM
கோவை: தமிழ்நாடு வனச்சீருடை பணியாளர்களுக்கான எழுத்துத்தேர்வு நாளை நடக்கிறது. கோவையில், 19 சிறப்பு மையங்களில் நடக்கும் தேர்வில், 5,817 பேர் பங்கேற்கவுள்ளனர்.
வன அலுவலர், கள உதவியாளர் உள்ளிட்ட, 181 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான நேரடி எழுத்துத் தேர்வு , தமிழ்நாடு வன சீருடைப் பணியாளர் தேர்வுக்குழு சார்பில், மாநிலம் முழுவதும் நாளை நடக்கிறது.
கோவையில், 19 சிறப்பு மையங்களில், 5,817 பேர் இத்தேர்வில் பங்கேற்கவுள்ளனர். தேர்வர்கள், ஹால்டிக்கெட்டை இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்ய அறிவுறுத்தப் பட்டுள்ளது. ஹால் டிக்கெட்டில் புகைப்படம் இடம்பெறாத தேர்வர்கள், சுய அடையாள புகைப்படம், பெயர், பதிவு எண் உள்ளிட்ட விவரங்களுடன் கூடிய சான்றொப்ப கடிதம் பெற்று வருவது அவசியம்.
மதிப்பு மிக்க பொருட்கள், மொபைல்போன், எலக்ட்ரானிக் வாட்ச், கால்குலேட்டர் போன்றவை தேர்வு அறைக்குள் கொண்டுவர தடைவிதிக்கப்பட்டுள்ளது. தேர்வு துவங்கி அரை மணி நேரத்திற்கு மேல் வரும் தேர்வர்கள், தேர்வு எழுத அனுமதி மறுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வு ஒருங்கிணைப்பாளர் மற்றும் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி ஞானகவுரி கூறுகையில், "தேர்வுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார்நிலையில் உள்ளன. தேர்வர்கள், ஓம்.எம்.ஆர்., சீட்டில் தங்கள் விவரங்களை தெளிவாக குறிப்பிட வேண்டும், அடித்தல், திருத்தல், பிழைகள் இருப்பின், தேர்வரின் விடைத்தாள் நிராகரிக்கப்படும். தேர்வுக்கு குறித்த நேரத்தில் வருவதுடன், அறை கண்காணிப்பாளரின் அறிவுரையை முறையாக பின்பற்றுவது அவசியம்" என்றார்.
