அண்ணாமலை பல்கலை பதிவாளர் ராஜினாமா கடிதம் கொடுத்ததால் பரபரப்பு
அண்ணாமலை பல்கலை பதிவாளர் ராஜினாமா கடிதம் கொடுத்ததால் பரபரப்பு
UPDATED : பிப் 25, 2015 12:00 AM
ADDED : பிப் 25, 2015 10:52 AM
சிதம்பரம்: அண்ணாமலை பல்கலைக்கழக பதிவாளர் ராஜினாமா கடிதம் கொடுத்ததால், ஊழியர்களிடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழகத்தை, தமிழக அரசு ஏற்று, முதன்மைச் செயலர் சிவ்தாஸ் மீனாவை, பல்கலைக்கழக நிர்வாக சிறப்பு அதிகாரியாக நியமித்தது. அதனைத் தொடர்ந்து, பல்கலையில் நடந்த பல்வேறு முறைகேடுகள், ஊழல்கள் கண்டுபிடிக்கப்பட்டன. முறைகேடுகளுக்கு உடந்தையாக இருந்ததாக, பல்கலைக் கழக துணைவேந்தர் ராமநாதன் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
அப்போது பதிவாளராக இருந்த மீனாட்சிசுந்தரம் மாற்றப்பட்டு, பேராசிரியராக இட மாறுதல் செய்யப்பட்டார். புதிய பதிவாளராக, பேராசிரியர் பஞ்சநதம் நியமிக்கப்பட்டார். சில மாதங்களுக்கு முன், பதிவாளர் பஞ்சநதம் தன் ராஜினாமா கடிதத்தை நிர்வாக சிறப்பு அதிகாரியிடம் அளித்துள்ளார். அவரை, நிர்வாக அதிகாரி சமாதானம் செய்து, பணியில் தொடரச் செய்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் சென்னை எழும்பூரில் உள்ள பல்கலைக்கழக படிப்பு மையத்தில், உயர் கல்வித்துறை இயக்குனர் தலைமையில் சிண்டிகேட் கூட்டம் நடந்தது.
நிர்வாக சிறப்பு அதிகாரி சிவ்தாஸ் மீனா, பதிவாளர் பஞ்சநதம், அனைத்து புல முதல்வர்கள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். பல்கலையில் எடுக்க வேண்டிய முக்கிய முடிவுகள் குறித்து, தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தின்போது, நிர்வாக சிறப்பு அதிகாரியிடம், என் உடல் நலத்தை கருத்தில் கொண்டு ராஜினாமா செய்கிறேன் என, பதிவாளர் பஞ்சநதம் கடிதம் கொடுத்தார். கடிதத்தை பெற்றுக் கொண்ட நிர்வாக சிறப்பு அதிகாரி, பரிசீலிப்பதாக தெரிவித்துள்ளார்.
பதிவாளர் ராஜினாமாவால் தூசு தட்டப்படும் கோப்புகள்
செலவினங்களை கட்டுக்குள் கொண்டுவர, போலி சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்தவர்களை பணி நீக்கம் செய்வது, ஜம்பிங் புரமோஷன், பல்கலைக் கழகத்தில் இல்லாத தனி அதிகாரி (எஸ்.ஓ.,) புரோகிராமர் போன்ற பதவிகள் மீது நடவடிக்கை எடுக்க பட்டியல் தயாரிக்கப்பட்டு, தயார் நிலையில் உள்ளது. இந்த முறைகேடுகள் மீது நடவடிக்கை எடுக்க பதிவாளர் கையெழுத்து போட வேண்டும்.
இதற்கு, பதிவாளர் பஞ்சநதம் மறுத்து வருவதால், நிர்வாகத்தில் குழப்பம் நிலவியது. தற்போது, பதிவாளர் ராஜினாமாவை தொடர்ந்து, முறைகேடு நபர்கள் மீதான நடவடிக்கைகள் தொடர்பான கோப்புகள் தூசு தட்டப்பட்டு, அதிரடி நடவடிக்கை பாயுமோ என முறைகேடு நபர்கள் அச்சத்தில் உள்ளனர்.
