UPDATED : செப் 04, 2015 12:00 AM
ADDED : செப் 04, 2015 10:33 AM
சென்னை
: சென்னையில், போலீஸ் எஸ்.ஐ., நேர்முகத் தேர்வு நேற்று துவங்கியது.
தமிழக காவல் துறையில் காலியாக உள்ள, 1,078 எஸ்.ஐ., பணியிடங்களை நிரப்ப, பிப்., 8ம் தேதி, தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் அறிவிப்பு வெளியிட்டது. இதில், 1.66 லட்சம் பேர் விண்ணப்பித்தனர். மே, 23ம் தேதி பொதுப்பிரிவினருக்கும், 24ம் தேதி காவல் துறை ஒதுக்கீடுதாரர்களுக்கும் எழுத்துத் தேர்வு நடந்தது.
அதில், தேர்ச்சி பெற்றவர்களுக்கு, உடல் தகுதி மற்றும் உடல் திறன் போட்டிகள் நடத்தப்பட்டன. இவற்றில் வெற்றி பெற்றவர்கள், 1:5 என்ற விகிதத்தில், நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்பட்டனர். அவர்களுக்கு நேற்று, சென்னை எழும்பூர் சி.பி.சி.ஐ.டி., வளாகத்தில் உள்ள தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரிய அலுவலகத்தில் நேர்முக தேர்வு துவங்கியது. ஒரு மாதம் நடக்க உள்ள நேர்முகத் தேர்வில், தினமும், 50 பேர் பங்கேற்கின்றனர். காவல் துறையில் பணியாற்றி வரும் அகிலா என்ற பெண் முதலில்
நேர்முகத் தேர்வை சந்தித்தார். அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகள் குறித்து சக போட்டியாளர்கள் ஆர்வமுடன் கேட்டு அறிந்தனர்.நேர்முகத் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு மருத்துவப் பரிசோதனை நடத்தப்பட்டு, அதில் தேர்ச்சி பெறுவோர், எஸ்.ஐ., பயிற்சிக்கு அனுப்பப்படுவர். அதன்பின் பணி ஆணை வழங்கப்படும்.
