UPDATED : செப் 05, 2015 12:00 AM
ADDED : செப் 05, 2015 04:59 PM
நான் வகுப்பறையிலேயே அடைந்து கிடக்கிறேன் என்று ஒரு ஜனம் கூடக் கவலைப் படாமல் தனது மாணவர்கள் உலகம் முழுவதிலும் பல்வேறு துறைகளில் உயர்ந்த பணியில் இருக்கின்றனர் என்று நினைத்துப் பெருமிதம் அடைபவர்கள் ஆசிரியர்கள்.
தாய், தந்தையிடம் செலவழித்த நேரத்தைவிட ஆசிரியர்களிடம் நாம் செலவழித்த நேரம் தான் அதிகம். பள்ளிப்பருவத்தை நினைத்துப் பார்க்காதவர்கள் எவரும் இல்லை.
“மாண்பெற முயல்பவர்
மாணவ ராவர்.
மாணவர் என்பவர் பல்வேறு சிறப்புக்ளைப்
பெறமுயற்சி செய்பவர் ஆவார்.”
என்னும் வரிகளை மெய்யாக மாணவர்களை முயற்சி செய் என்று தூண்டுகோலாக இருப்பவர்கள் ஆசிரியர்களே. தன்னிடம் பயிலும் அனைத்து மாணவர்களையும் நல்வழிப்படுத்தி, நல்ல சிந்தனைகள், பண்புகள், போன்றவற்றைக் கற்பித்து ஒரு சிற்பியைப் போல் அவர்களைச் செதுக்கி சமுதாயத்தில் சிறந்தவனாக மாற்றுவது ஆசிரியர்.
ஆசிரியர் என்பவர்:
ஒருவனின் தலைவிதி அவனது வகுப்பறையிலிருந்தே தீர்மானிக்கப்படுக்கிறது. வகுப்பறையில் ஆசிரியர்கள் கடமைக்கெனப் பாடம் நடத்தாமல், ஒரு மழைத் துளியானது எவ்வாறு ஆழ் கடலுக்குள் உள்ள முத்துச்சிப்பிக்குள் விழுந்து, எப்படி முத்தாக மாறுகிறதோ, அது போலவே ஆசிரியர்களும், தனக்குக் கிடைத்த, கல்வி, தகவல்கள், அறிவு போன்றவற்றை, முதிரச்செய்து மாணவர்களை முத்தாக மாற்றுபவர்கள் தான் சிறந்த ஆசிரியர்கள். தனது பெற்றோர்களுக்கு அடுத்த இடத்தில் வைத்து இரண்டாவது பெற்றோர் என அழைக்கப்படுவதும் ஆசிரியர்கள் தான்.
வெறும் கல்வியை மட்டும் போதிப்பது இல்லை ஆசிரியர் பணி, மாணவர்களுக்கு ஒழுக்கம், பண்பு, ஆன்மீகம், பொது அறிவு என அனைத்தையும் எடுத்துக்கூறி அவர்களைச் சிறந்த மனிதர்களாக்கும் பணியாகும். அப்படிப்பட்ட உன்னதப் பணியை மாணவர்களுக்கு அளிக்க, தன்னலமற்ற, தியாக மனப்பான்மைக் கொண்டவராக இருந்தால் மட்டும் போதாது; கற்பிக்கும் தொழிலை நேசிப்பவராகவும் இருக்க வேண்டும். அவர்கள் தான் உண்மையான ஆசிரியர்கள்.
தன்னிடம் படிக்கும் அணைத்து மாணவர்களையும், சமுதாயத்துக்கு ஏற்ற வகையில் மனிதனாக மாற்ற வேண்டிய கடமையும், கட்டாயமும் ஆசிரியர்களுக்கு உண்டு. கற்பித்த ஆசிரியரின் வெற்றி எது என்று சொன்னால் அது மாணவனுக்குச் சமூகத்தில் கிடைக்கும் வெற்றிதான். இந்தச் சமுதாயத்துக்கு சிறந்த மாணவர்களைக் கொடுக்க, ஆசிரியர்கள் முழுமையான ஆசிரியராக உருவாக்கப்பட வேண்டும். மாணவர்களின் சுய அறிவைத் தூண்டுவது, ஆசிரியர்களால் மட்டுமே முடியும்.
இந்தியா பெற்றெடுத்த சிறந்த ஆசிரியர்கள்:
டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன், இந்தியாவில் ஆசிரியர் தினம் கொண்டாடப்படுவதற்கான உயர்ந்த மனிதர்!
சாவித்ரிபாய் பூலே, இந்தியாவின், முதல் பெண்கள் பள்ளிக்கு முதல் பெண் ஆசிரியை.
நிஸிம் எசேக்கியேல், காலனித்துவ தடைகளை இந்திய ஆங்கில எழுத்துகள் மூலம் உடைத்தெறிந்த சிறந்த ஆசிரியர்
டாக்டர் மன்மோகன் சிங், இந்தியாவின் முன்னாள் பிரதம மந்திரி, சிறந்த பொருளியல் ஆசிரியர், பல்வேறு பல்கலைக்கழகத்தில் பணியாற்றியுள்ளார். பஞ்சாப் பல்கலைக்கழகம்,தில்லி பொருளியல் பள்ளி- தில்லி பல்கலைக்கழகம் மற்றும் ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகம்
பண்டிட் சவாய் கந்தர்வா, இந்துஸ்தானி இசை ஆசிரியர்
உஸ்தாத் அல்லா ராகா கான், தபலா இசை ஜாபவான், பல மாணவர்களால் பெரிதும் நேசிக்கப்பட்டவர்.
சி.கே பிரஹலாத், குரு ரபீந்திரநாத் தாகூர், மற்றும்
டாக்டர் ஏ.பி.ஜே அப்துல் கலாம் - இந்தியாவின் முன்னாள் மற்றும் மக்களின் ஜனாதிபதி, சிறந்த ஆசிரியர், சிறந்த விஞ்ஞானி, இந்தியர்கள் அனைவரும் நேசித்த மாமனிதர், மாணவர்களின் கனவு நாயகன்.
ஆசிரியர்களுக்கு, பொறுமை, அர்ப்பணிப்பு, கற்றுக்கொள்ளும் ஆர்வம் இருந்தால் மட்டுமே தரமான கல்வியை மாணவர்களுக்கு அளித்து ,ஆசிரியர் பணியில் சாதிக்க முடியும். ஆசிரியர்களும் மாணவர்கள்தான், தனது அறிவைப் பெருக்கி கொள்ளும் போது, அதற்கு அவர்கள் தயங்கவும் கூடாது. ஆசிரியர் என்ற பெருமைக்குரிய பதவியில் சிறந்து விளங்கும் ஆசிரியர்களுக்கு இனிய ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள்.
