UPDATED : செப் 05, 2015 12:00 AM
ADDED : செப் 05, 2015 11:40 AM
கோவை
: கோவை மாவட்டத்தில், நல்லாசிரியர் தேர்வுக்கு குழுவில் இருந்த அதிகாரிக்கு மாநில
நல்லாசிரியர் விருது வழங்கப்பட்டுள்ளதாக சர்ச்சை எழுந்துள்ளது.
தமிழகம்
முழுவதும், ஒவ்வொரு ஆண்டும் சிறந்த ஆசிரியர்கள்
தேர்வு செய்து நல்லாசிரியர் விருது வழங்கி கவுரவிக்கப்படுவர். நடப்பு
கல்வியாண்டில், 377 பேர் இப்பட்டியில் தேர்வு
செய்யப்பட்டுள்ளனர். கோவை மாவட்டத்தில், 12 பேர்
இப்பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.
நல்லாசிரியர் விருதுக்கான மாவட்ட தேர்வுக்குழுவில், முதன்மை கல்வி அலுவலர் தலைமையில், மாவட்ட கல்வி அலுவலர், தொடக்க கல்வி அலுவலர், மெட்ரிக் பள்ளி ஆய்வாளர், மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வர், உதவி தொடக்க கல்வி அலுவலர், ஒரு தலைமையாசிரியர் என, ஏழு பேர் இடம் பெறுகின்றனர்.
இவர்களின்
ஆய்வுகளின் படியே, தகுதியான விண்ணப்பங்கள் பரிந்துரை
செய்யப்படுகிறது. இதற்கான, விண்ணப்பங்கள் கடந்த ஜூலை மாதம் முதல்
வாரத்தில் பெறப்பட்டு, ஆய்வுகள் ஜூலை இறுதி வரை
மேற்கொள்ளப்பட்டது. இக்கல்வியாண்டு துவக்கம் முதல், காரமடை அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் மந்திரபதி, மாவட்ட கல்வி அலுவலர் பொறுப்பை கூடுதலாக ஏற்று செயல்பட்டார்.
நல்லாசிரியர் விருதுக்கான ஆய்வு குழுவில் இவரும் இருந்தார்.
நல்லாசிரியர் விருது பெறுவதற்கு அனைத்து தகுதிகள் இருந்தாலும், நல்லாசிரியர் விருதுக்கு விண்ணப்பித்த ஒருவர் தேர்வுக்குழுவில் இடம் பிடித்ததும், மாவட்ட கல்வி அதிகாரிகள் இவரை தேர்வு செய்ததும் விதிமுறைககு புறம்பானது என சர்ச்சை கிளம்பியுள்ளது. விதிமுறைகளை பின்பற்றாமல் நல்லாசிரியர் விருதுக்கு ஆசிரியர்களை பரிந்துரை செய்த அதிகாரிகளின் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாடு கலையாசிரியர்கள் சங்க மாநிலத்ததலைவர் ராஜ்குமார் கூறுகையில், விதிமுறைப்படி, 2014-15 கல்வியாண்டில் குறைந்தபட்சம், நான்கு மாதங்கள் முழுநேர தலைமையாசிரியர் பணியில் இருப்பது அவசியம். மாவட்ட கல்வி அலுவலர் பொறுப்பு வகித்த மந்திரபதி, கடந்த ஆகஸ்ட் மாதம் தான் மீண்டும் தலைமையாசிரியர் பணிக்கு சென்றுள்ளார். இந்நிலையில், நான்கு மாதம் முழுநேர பணியில் இருந்திருக்க வாய்ப்பில்லை. மேலும், ஜூலை 20 முதல் 30 வரை ஆய்வு பணிகள் நடந்தது. ஆக., 10ம் தேதி பட்டியல் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
தேர்வுக்குழு அதிகாரியே விண்ணப்பம் சமர்ப்பித்து, ஆய்வு செய்து, விருதுக்கு பரிந்துரை செய்வது ஏற்புடையதல்ல, என்றார். முதன்மை கல்வி அலுவலர் அருள் முருகன் கூறுகையில், ஆக., மாதம் ஆய்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. விருது அறிவிக்கப்பட்டுள்ள, மந்திரபதி தலைமையாசிரியர் தான். கூடுதலாக மாவட்ட கல்வி அலுவலர் பொறுப்பில் இருந்தார், என்றார்.
