UPDATED : செப் 25, 2015 12:00 AM
ADDED : செப் 25, 2015 10:25 AM
காந்திகிராமம்:
மத்திய புதுப்பிக்கவல்ல எரிசக்தி அமைச்சகம்
சார்பில், தமிழக
இளைஞர்களுக்கு ஒரு வார சோலார் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
இந்தியாவில் 2022க்குள் சோலார் போன்ற புதுப்பிக்கவல்ல எரிசக்தி மூலம் ஒரு லட்சம் மெகாவாட் மின் உற்பத்தி செய்ய மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. இதற்காக தனியாருடன் இணைந்து நாடு முழுவதும் சோலார் மின் உற்பத்தி மையங்கள் அமைக்கும் பணி நடக்கின்றன. இதன்மூலம் 20 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்காக ஐ.டி.ஐ., டிப்ளமோ முடித்த தமிழக இளைஞர்களுக்கு சோலார் உபகரணங்களை இணைத்தல், பழுதுநீக்குதல் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. தமிழகத்தில் இப்பயிற்சியை அளிக்க காந்திகிராம பல்கலையை மத்திய புதுப்பிக்கவல்ல எரிசக்தி அமைச்சகம் தேர்வு செய்துள்ளது. முதற்கட்டமாக, ரூ.15 லட்சம் ஒதுக்கியுள்ளது.
காந்திகிராம பல்கலை எரிசக்தி மையத் தலைவர் கிருபாகரன்
கூறியதாவது:
வாரத்திற்கு 30 மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும். மொத்தம் 10 பயிற்சிகள் அளிக்க உள்ளோம். தங்குமிடம், உணவு இலவசம். பெறப்படும் விண்ணப்பம் அடிப்படையில் பயிற்சி தேதி, இடம் அறிவிக்கப்படும். விரும்புவோர் www.ruraluniv.ac.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம், என்றார்.
