பல்கலை துணைவேந்தர் பணியிடம் காலி; ஏராளமான கோப்புகள் தேக்கம்!
பல்கலை துணைவேந்தர் பணியிடம் காலி; ஏராளமான கோப்புகள் தேக்கம்!
UPDATED : செப் 25, 2015 12:00 AM
ADDED : செப் 25, 2015 10:37 AM
மதுரை
:ஐந்து பல்கலைகளில் துணைவேந்தர் பணியிடம் பல
மாதங்களாக காலியாக இருப்பதால், முக்கிய முடிவுகள்
மேற்கொள்ள வேண்டிய ஏராளமான கோப்புகள் தேங்கி கிடக்கின்றன.
பல்கலை நிர்வாகங்கள் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மதுரை காமராஜ் பல்கலையில் கல்யாணி, நெல்லை மனோன்மணி சுந்தரனார் பல்கலை குமரகுரு, கொடைக்கானல் அன்னை தெரசா மகளிர் பல்கலை மணிமேகலை, வேலுார் திருவள்ளுவர் பல்கலை குணசேகரன், தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலை விஸ்வநாதன் ஆகியோரின் பதவிக்காலம் முடிந்து, பல மாதங்கள் ஆகின்றன. இதில் ஆசிரியர் கல்வியியல் பல்கலை தவிர நான்கு பல்கலைக்கு துணைவேந்தர் தேர்வுக் குழு ஏற்படுத்தப்பட்டு, தேர்வு செய்யும் பணிகள் நடக்கின்றன.
இந்த ஐந்து பல்கலைகளின் நிர்வாகத்தை, உயர்கல்வித்துறை செயலர் அபூர்வா தலைமையில், அந்தந்த பல்கலை கன்வீனர் கமிட்டிகள் மேற்கொண்டு வருகின்றன. இதனால் கன்வீனர் கமிட்டி சார்பில், சாதாரண முடிவுகளை எடுப்பதற்கும் கூட, கமிட்டி தலைவரான செயலரை சார்ந்திருக்க வேண்டி உள்ளது. அவரது கையெழுத்திற்காக சென்னை செல்ல வேண்டி உள்ளது. இவ்வகையில்,ஒவ்வொரு பல்கலை சார்பிலும், 300க்கும் மேற்பட்ட கோப்புகள் செயலர் அலுவலகத்தில் தேங்கி கிடப்பதாக சர்ச்சை எழுந்துள்ளது. பல்கலை நிர்வாகப் பணிகள் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து
பேராசிரியர்கள் சிலர் கூறியதாவது:
ஒரு பல்கலையில் துணைவேந்தர் பதவிக் காலம் முடிந்த பின், அங்குள்ள மூத்த சிண்டிகேட் உறுப்பினர் தலைமையில், கன்வீனர் கமிட்டி அமைக்கப்பட்டு, பல்வேறு முடிவுகள் உடன் எடுக்கப்பட்டு வந்தன. ஆனால், சில ஆண்டுகளாக பல்கலை கன்வீனர் கமிட்டி தலைவராக, உயர் கல்வித்துறை செயலர் நியமிக்கப்படுகிறார். இதனால் பல்கலை மேற்கொள்ளும் சாதாரண முடிவை கூட, செயலர் ஒப்புதல் பெற வேண்டி உள்ளது. கோப்புகளில் கையெழுத்து பெற, மாதத்தில் பல நாட்கள் இப்பல்கலைகளின் பதிவாளர்கள், சென்னை செயலர் அலுவலகத்தில் காலத்தை கழிக்க வேண்டிய நிலை உள்ளது; இதனால் நிர்வாகப்பணிகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
மேலும், பல்கலை பணியாளர்கள் பதவி உயர்வு, ஆராய்ச்சி பிரிவு மாணவர்களுக்கான வாய்மொழித் தேர்வு தேதி முடிவு செய்வது மற்றும் அதற்கான உத்தரவுகள் பிறப்பிப்பது போன்றவற்றில் தாமதம் நீடிக்கிறது. துணைவேந்தர் தேர்வுக்குழு சுறுசுறுப்புடன் செயல்பட்டு விரைவில் புதிய துணைவேந்தர்களை தேர்வு செய்ய முன்வர வேண்டும் என்றனர்.
