பான்கோஸ் பள்ளியில் வகுப்புகள் நடக்காததை கண்டித்து மறியல்
பான்கோஸ் பள்ளியில் வகுப்புகள் நடக்காததை கண்டித்து மறியல்
UPDATED : அக் 15, 2015 12:00 AM
ADDED : அக் 15, 2015 10:52 AM
புதுச்சேரி
:
பான்கோஸ் பள்ளியில் ஆசிரியர்கள் போராட்டத்தால், வகுப்புகள் நடக்காததைக் கண்டித்து தலைமை தபால் நிலையம் எதிரே,
மாணவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
லிங்காரெட்டிப்பாளையம் கூட்டுறவு சக்கரை ஆலை நிர்வாகத்தால் நடத்தப்படும் பான்கோஸ் பள்ளியில் 1100க்கும் அதிகமான மாணவர்கள் படிக்கின்றனர். இங்கு பணி புரியும் ஆசிரியர்கள், ஊழியர்கள் பணி நிரந்தரம், சம்பள உயர்வு கோரி 2 மாதமாக போராடி வருகின்றனர். ஆசிரியர்கள் பாடம் நடத்த வராததால், எஸ்.எஸ்.எல்.சி., மற்றும் பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்கள் பாதிக்கின்றனர்.
ஆசிரியர்கள் வகுப்பிற்கு வராததை கண்டித்து, மாணவர்கள் 2 தினங்களாக பள்ளி முன்பு ஆர்ப்பாட்டம், மறியல் நடத்தியும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் நேற்று காலை 10:00 மணிக்கு, பள்ளி மாணவர்கள் வகுப்பை புறக்கணித்து முதல்வர் ரங்கசாமி மற்றும் கவர்னரை சந்தித்து கோரிக்கை மனு கொடுக்க பெற்றோர்களுடன் வந்தனர். தலைமை தபால் நிலையம் எதிரே போலீசார் மாணவர்களை தடுத்ததால் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இரண்டு மணி நேரத்திற்கு பின்பு 12:00 மணிக்கு சட்டசபை உறுதி மொழி கூட்டத்திற்கு வந்த நமச்சிவாயம் எம்.எல்.ஏ.,வை மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் சந்தித்து குறைகளை தெரிவித்தனர். பகல் 2:30 மணிக்கு சட்டசபையில் முதல்வர் ரங்கசாமியை சந்தித்து பாடங்கள் நடத்தாதது குறித்து தெரிவித்தனர்.
