சாதிக்கும் பெண்மை; பாவைக் கூத்து மூலம் சூழலியல் கல்வி!
சாதிக்கும் பெண்மை; பாவைக் கூத்து மூலம் சூழலியல் கல்வி!
UPDATED : அக் 23, 2015 12:00 AM
ADDED : அக் 23, 2015 10:30 AM
டில்லியில் பிறந்து வளர்ந்து, தமிழ், ஆங்கிலம், சமஸ்கிருதம், இந்தி மொழிகளில் புலமை பெற்று, தற்போது சென்னை ஆழ்வார் பேட்டையில் வசிக்கும் ஆர்.பானுமதி, ௫௮, சூழலியல் கல்வியை, பாவைக் கூத்து மற்றும் புகைப்படக் கலை மூலம் கற்பிக்கிறார்.
இயற்கை ஆர்வலர்,
வன உயிரி புகைப்பட கலைஞர், வண்ணத்துப்பூச்சிகள் நுாலின் ஆசிரியர், பாவைக்கூத்து பயிற்றுனர் என, பல்வேறு
பரிமாணங்கள் கொண்ட அவர், பட்டப்படிப்பை முடித்ததும், அனைத்துலக இயற்கை பாதுகாப்பு சங்கத்தில், சுற்றுச்சூழல் கல்வியாளராக பணியில் சேர்ந்தார். அப்போது அவர்
மேற்கொண்ட இந்திய இயற்கை சுற்றுலாவின் போது, பாவைக் கூத்தினைப் பற்றி அறிந்தார்.
அந்த கலையை, தன் ஆசிரிய பணியில் சேர்க்க வேண்டும் என்ற ஆவலில், 1981ல், தென்னிந்திய, தோல் பாவை கூத்துக் கலைஞர்களின் நிலை என்ற தலைப்பில், ஒப்பாய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றார். அதையடுத்து அவரே, அந்த கலையை கற்றுக் கொண்டார்.
இதுகுறித்து, அவர் கூறியதாவது:
புகைப்படங்களின் வழியாக, இயற்கை கல்வியை கற்பித்த நான், அமெரிக்காவில், ஜென் ஹென்சன் என்ற கலைஞர், மப்பெட் என்ற பெயரில், பொம்மைகளை பேச வைத்து கல்வி கற்பித்ததை அறிந்தேன். அந்த முறை என்னை வெகுவாக கவர்ந்தது. 2001ல், என் வேலையை விட்டுவிட்டு, கையில் மாட்டிக்கொள்ளும் மேற்கத்திய பாணியிலான பொம்மைகளை வடிவமைத்து, அவற்றிற்கு பெயர்கள் இட்டு, சாதாரண வாழ்வியல் மாந்தர்களை கதாநாயகர்களாக்கினேன்.
அதே ஆண்டு,
பாவைக்கூத்து மையம் என்ற பெயரில், ஒரு அறக்கட்டளையை துவக்கினேன். நான்
இயற்கை ஆர்வலராகவும் இருப்பதால், தோல் பாவைக்கூத்தில் பயன்படுத்தப்படும்
விலங்கு தோலுக்கு பதிலாக, சணல், துணி, பஞ்சு, காகிதம் உள்ளிட்ட பொருட்களால் பொம்மைகள் செய்தேன்.
பள்ளிகளில்,
சுற்றுப்புற துாய்மை, பல்லுயிர் பரவலின் அவசியம், பாலியல் கல்வி,
பதின்பருவத்து குழப்பங்களும் தீர்வுகளும்
உள்ளிட்ட தலைப்புகளிலும், கல்லுாரிகளில், விழிப்புணர்வு கல்வியையும், தன்னார்வ தொண்டு
நிறுவனங்கள் நடத்தும் எய்ட்ஸ் விழிப்புணர்வு கூட்டங்களில் அந்த நோய் குறித்தும்
நிகழ்ச்சிகளை நடத்தி, பயிற்சி அளித்தேன்.
குறிப்பாக,
மகிழ்ச்சியாக இருக்கும் விலங்குகள், பாதிக்கப்படும் விலங்குகள், நோய் தொற்றுள்ள
மனிதன் என, பலவாறாக எனது கதாப்பாத்திரங்களை
அமைத்து, அவற்றிற்கு ஏற்ப குரல்களை மாற்றிப்
பேசி, பயிற்சி அளித்தேன்.அதனால், பேச முடியாத, காது கேளாத, பார்வையற்ற, கூச்ச சுபாவமுள்ள பல
குறைபாடுகள் உள்ள குழந்தைகள் கூட, பாவைக்கூத்தின் மூலம் கவனிக்கும்
ஆற்றலையும், ஞாபக சக்தியையும் வளர்த்துக் கொள்ள
துவங்கின. தமிழகத்தில், கூத்துக்கலைஞர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதால், பலர், தம் சந்ததியினருக்கு அந்த கலையை
கற்பிக்காமல் வெவ்வேறு வேலைகளுக்கு அனுப்புகின்றனர்.
ஆனால், நான், கலையோடு, கல்வியையும், புதிய பரிமாணங்களையும் புகுத்துவதால், இளந்தலை முறையிடம், பாவைக்கூத்துக்கு நல்ல வரவேற்பு கிடைக்கிறது. புகைப்படக் கலையை பொறுத்தவரை, கலைக் கண்ணோட்டத்தை விட, புகைப்படங்களின் வழி கல்வி என்ற ரீதியில் தான், வன உயிரிகளை புகைப்படம் எடுத்து வந்திருக்கிறேன்.
கடந்த 30 ஆண்டுகளில், நான் எடுத்த வண்ணத்துப்பூச்சிகளில் பெரும்பாலானவற்றை தொகுத்து, அவற்றிற்கு, நீல அழகி, புதர் தாவி, இரட்டைவால் சிறகன், வெந்தய வரியன் போன்ற, அழகான தமிழ் பெயர்கள் இட்டு, வண்ணத்துப்பூச்சிகள் என்ற பெயரில், க்ரியா பதிப்பகத்தின் மூலம் கையேடாக வெளியிட்டுள்ளோம். எனக்கு தெரிந்த சூழலியல் கல்வியை, பாவைக் கூத்து, புகைப்பட கலை வழியாக, கற்பித்து வருகிறேன். இவ்வாறு, அவர் கூறினார்.
