UPDATED : டிச 08, 2015 12:00 AM
ADDED : டிச 08, 2015 11:02 AM
சேலம்
: சேலம்
மாநகராட்சி உயர்நிலைப்பள்ளி, புதிய கட்டடம் கட்டி முடிக்கப்பட்டு,
ஆறு மாதங்களுக்கு மேலாகியும், திறப்பு விழா காணப்படாமல் இருப்பதால், கட்டடம் வீணாகும் அவலம் உள்ளது.
சேலம், 50வது வார்டுக்க உட்பட்ட, மணியனூர் திருவேங்கடம் நகரில், மாநகராட்சி உயர்நிலைப்பள்ளி உள்ளது. ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை, 1,500 மாணவ, மாணவியர் படிக்கின்றனர். அந்த கட்டடம் மோசமான நிலையில் இருப்பதால், புதிய கட்டடம் கட்டுவதற்காக, மாநகராட்சி மன்ற கூட்டத்தில், ஓராண்டுக்கு முன் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதையடுத்து, மணியனூர் குப்பைமேட்டில் இடம் தேர்வு செய்யப்பட்டு, 2.54 கோடி ரூபாய் மதிப்பில், கட்டுமான பணிகள் துவங்கின. பள்ளி கட்டுமான பணி முடிவடைந்து, ஆறு மாதங்களுக்கு மேலாகியும், இதுவரை திறப்பு விழா காணப்படவில்லை.
கட்டடத்தின் முன் பகுதியில்
போட்ட பூட்டு துருப்பிடித்து கிடக்கிறது. அவ்வழியாக செல்லும் விஷமிகள், கற்களையும், பாட்டிலையும் பள்ளி வளாகத்தில்
வீசியெறிந்துள்ளனர். கோடியில் செலவிட்டு, மாணவர்களின்
நலனுக்காக கட்டப்பட்ட பள்ளி, பாழாகி கிடப்பதை கண்டு அப்பகுதிவாசிகள்
அதிருப்தியடைந்துள்ளனர். பெற்றோரும், விரைவாக பள்ளியை
திறக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
மாநகராட்சி கமிஷனர் செல்வராஜ் கூறுகையில், பள்ளி திறப்பு விழா தொடர்பாக அரசுக்கு அறிக்கை அனுப்பி உள்ளோம். இதுவரை தகவல் எதுவும் இல்லை. ஒட்டுமொத்தமாக புதிய கட்டடங்கள் விரைவில் திறப்பு விழா காணப்படலாம், என்றார். துணை மேயரும், 50வது வார்டு கவுன்சிலருமான நடேசன் கூறுகையில், மாநகராட்சி உயர்நிலைப்பள்ளியை, முதல்வர் வீடியோ கான்பரன்ஸிங் மூலம், ஓரிரு நாளில் திறந்து வைக்க உள்ளார். அது தொடர்பான தகவல் வந்துள்ளது. அதற்கான ஏற்பாடுகளை தான் செய்து கொண்டிருக்கிறேன், என்றார்.
