UPDATED : டிச 08, 2015 12:00 AM
ADDED : டிச 08, 2015 11:19 AM
பெங்களூரு
: பெங்களூரு பல்கலைக்கழக தேர்வுகளின் விடைத்தாள்களை மதிப்பீடு செய்யும்
பணிகளை புறக்கணிப்பது என, கர்நாடகா பல்கலைக்கழக ஆசிரியர் கழக கூட்டமைப்பு
தீர்மானித்துள்ளது.
கர்நாடகா பங்கலைக்கழக ஆசிரியர் கழக கூட்டமைப்பு- எப்.யூ.சி.டி.ஏ.கே., தலைவர் பிரகாஷ் கூறியதாவது: எங்கள் கோரிக்கைகள் நிலுவையில் உள்ளன. அரசுக்கும், உயர் கல்வி துறைக்கும் பல மனுக்கள் கொடுத்து உள்ளோம்; எவ்வித நடவடிக்கையும் இல்லை. விடைத்தாள் மதிப்பீடு பணியை புறக்கணிப்பதன் மூலம், மாணவர்களை வருத்துவதாக கருத வேண்டாம். தற்போதைய அட்டவணைப்படி, பாடங்களை முடித்து கொடுப்போம்.
ஏற்கனவே, மதிப்பீடு செய்யும் ஆசிரியர்கள் எண்ணிக்கை குறைவாக இருப்பதால், மதிப்பீடு பணி பாதிக்கப்பட்டுள்ளது. இந்நேரத்தில் எங்கள் கோரிக்கையை வலியுறுத்தவில்லை எனில், எங்களை அரசு புறக்கணிக்கும் வாய்ப்புள்ளது. இதனால், எங்கள் எதிர்ப்பை தெரிவிக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.
பெங்களூரு பல்கலைக்கழக மதிப்பீடு பதிவாளர் கே.என்.நிங்கே கவுடா கூறுகையில், தற்போதைய சூழலில் ஆசிரியர்கள், தங்கள் எதிர்ப்பை தெரிவிப்பது சரியல்ல. அரசுடன் போராட வேண்டுமே தவிர, மாணவர்களின் எதிர்காலத்துடன் அல்ல. மதிப்பீடு பணியை அவர்கள் புறக்கணித்தால், மாற்று ஏற்பாடுகளை பெங்களூரு பல்கலைக்கழகம் மேற்கொள்ளும், என்றார்.
