UPDATED : டிச 16, 2015 12:00 AM
ADDED : டிச 16, 2015 10:39 AM
பொள்ளாச்சி
: இயற்கை விவசாயம் குறித்து மாணவர்களிடையே விளக்கும் வகையில், பள்ளிகளில் இதற்கான திட்டங்களை அரசு வகுக்கலாம், என கோரிக்கை எழுந்துள்ளது.
பொள்ளாச்சி பகுதி விவசாயம் சார்ந்த பகுதியாக உள்ளது. போதிய தண்ணீர் வசதி உள்ளிட்டவை கிடைத்ததுடன், போதிய லாபமும் கிடைத்து வந்ததால், மற்ற சாகுபடியை விட தென்னை சாகுபடி செய்ய விவசாயிகள் ஆர்வம் காட்டினர். தென்னங்கீற்றிலிருந்து, தென்னை மட்டை வரை அனைத்தும் மதிப்புகூட்டப்பட்ட பொருளாக மாற்றப்படுவதால், தென்னை விவசாயிகளின் வாழ்க்கையில், ஒரு மாற்றத்தை ஏற்படுத்தியது என்றால் ஐயமில்லை.
இந்நிலையில், தென்னை மட்டையிலிருந்து தென்னை நார் உற்பத்தி செய்து, அது கேரளா உள்ளிட்ட மாநிலங்களுக்கும், சீனா போன்ற வெளிநாடுகளுக்கும் அதிகளவு ஏற்றுமதி செய்யப்படுகிறது. தென்னை மட்டையிலிருந்து மஞ்சி மட்டும் உற்பத்தி செய்து அனுப்பி வந்த தென்னை நார் உற்பத்தியாளர்கள், மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்கும் பணியிலும் ஆர்வம் காட்ட துவங்கியுள்ளனர்.
அதில், மரப்பலகை, தென்னை நாரில், அழகிய பொருட்கள் தயாரிப்பு போன்றவை செய்யப்படுகிறது. இது தவிர, இயற்கையான உரமாகவும் தென்னை நார் கழிவு பயன்படுத்தப்படுகிறது. இதுபோன்று தயாரிப்பிற்கு மதிப்பு கொடுத்து, மதிப்புக்கூட்டப்பட்ட பொருளுக்கு மத்திய, மாநில அரசு முக்கியத்துவம் கொடுத்தால் இத்தொழிலை பாதுகாக்க முடியும் என்ற கோரிக்கையும் எழுந்து வருகிறது.
அரசின் மாடி
வீட்டுத்தோட்டம் போன்றவைக்கு, தென்னை நார் கழிவு (காயர் பித்) பயன்படுத்தப்படுகிறது.
தரத்திற்கு ஏற்றாற் போன்று, காய்கறிகளை சாகுபடி லாபம் செய்வதற்கான
வழிமுறைகளையும், தென்னை நார் கூட்டுக்குழுமங்கள் மூலம்
விளக்கமளிக்கப்படுகிறது. இது ஒரு புறம் என்றால், தற்போது, மாணவர்களிடமும் இயற்கை விவசாயம்
குறித்தும், தென்னை நாரில் தயாரிக்கப்பட்ட
தொட்டிகள் மூலம் செடிகள் வளர்ப்பு முறை குறித்து விளக்கமளிக்கவும் கூட்டுக்குழுமம்
மூலமாக திட்டமிட்டு வருகின்றனர். இதற்கு அரசும் உதவிக்கரம் நீட்டினால் பயனுள்ளதாக
இருக்கும் என்கின்றனர்.
காயர் சிட்டி கன்சாலிட்டின் (கூட்டுக்குழுமம்) செயலர் கவுதமன் கூறியதாவது: வெளிநாடுகளில், காயர் பித் அதிகளவு பயன்படுத்தப்படுகிறது. சாகுபடி செய்வதற்கு ஏற்ற வகையில், இயற்கை உரங்கள், காய்கறி கழிவுகள், டீத்துாள் போன்றவையும் போடலாம். வெளிநாடுகளில், மாடி வீட்டுத்தோட்டத்திற்கு காயர் பித்தை பயன்படுத்துகின்றனர்.
அதில், நுண்ணுாட்டச்சத்து மாத்திரை மூலமாக வழங்கி செடிக்கு சத்து
அளிக்கின்றனர். இதுபோல, கொரியா போன்ற நாடுகளில், மாணவர்களிடம் இயற்கை விவசாயம் மற்றும் மாடிவீடு தோட்டம் பற்றி
விளக்கப்படுகிறது. அவர்களுக்கேற்றாற் போன்று, தென்னை நாரிலேயே தொட்டிகள் தயாரித்து, அதற்கு தண்ணீர் மற்றும் நுண்ணுாட்டச்சத்து மாத்திரை மூலம் வழங்க ஒரு
பொம்மை போன்ற ஒரு கருவியை உருவாக்கியுள்ளனர்.
அதில், மாத்திரை மற்றும் தண்ணீரை ஊற்றி தொட்டிக்குள் வைத்து விட்டால்
போதும். தேவையான போது, சத்து கலந்த தண்ணீரை
எடுத்துக்கொள்ளும். மேலும், சிறு பொம்மைகள் போன்றும் அமைத்து,
அதில் விதைகள் மற்றும் சத்து மாத்திரையும்
வைக்கப்பட்டுள்ளன.
குழந்தைகளை கவரும் வகையில், இதுபோன்ற திட்டம் செயல்படுத்தப்படுகிறது. வெளிநாடுகளில், 60 சதவீதம் காயர் பித் பயன்படுத்தப்படுகிறது. சிறு தொட்டி ஆறு மாதங்கள் வரை வைக்கலாம்; சத்து மாத்திரை இரண்டு மாதத்திற்கு ஒன்று வழங்கலாம். நம் நாட்டிலிருந்து செல்லும் காயர் பித்தை பல்வேறு வகையில் அவர்கள் பயன்படுத்துகின்றனர். நமக்கு அது பற்றிய போதிய விழிப்புணர்வு இல்லை.
தற்போது, இது குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. மேலும், மாணவர்கள் பயன்படுத்தும் வகையில், தென்னை நாரில் தொட்டிகள் மற்றும் சத்தான மாத்திரை போன்றவை வழங்குவதற்காக சிறு பொம்மைகள் போன்றவையும் உருவாக்கப்பட்டுள்ளன. மாணவர்களிடம் இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த திட்டமிட்டுள்ளோம். மேலும், படிக்கும் போதே மாணவர்களிடம் இயற்கை விவசாயம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த அரசும் உதவிக்கரம் நீட்டினால் மேலும் பயனுள்ளதாக இருக்கும். இவ்வாறு, கவுதமன் கூறினார். பொள்ளாச்சி அருகே பூசாரிபட்டியில் தேங்காய் நார் உற்பத்தியாளர்கள் மற்றும் பயன்பாட்டாளர்கள் கருத்தரங்கம் நாளை (17ம் தேதி) நடக்கிறது.
