UPDATED : ஜன 06, 2016 12:00 AM
ADDED : ஜன 06, 2016 11:03 AM
திண்டிவனம்: திண்டிவனம் நகராட்சி பள்ளி மாணவியருக்கு, பாலியல் தொந்தரவு கொடுத்த ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, பெற்றோர் மற்றும் பொதுமக்கள் பள்ளியை முற்றுகையிட்டனர்.
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் நகராட்சி தொடக்கப் பள்ளியில், 25க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படிக்கின்றனர். இப்பள்ளியில், 4 மற்றும் 5ம் வகுப்பு பயிலும் மாணவியர், பள்ளிக்கு செல்லாமல், இரண்டு நாட்களாக வீட்டிலேயே இருந்துள்ளனர். பெற்றோர் விசாரித்த போதும், மாணவியர் சரியான பதில் கூறவில்லை.
நேற்று முன்தினம் மாலை, இப்பள்ளியில், 5ம் வகுப்பு படிக்கும் ஒரு மாணவி தன் பெற்றோரிடம், ஆசிரியர் சம்பத்குமார் தவறாக நடப்பதாக அழுது கொண்டே கூறியுள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் மற்றும் அப்பகுதிவாசிகள், ஆசிரியரை கண்டிக்க நேற்று காலை பள்ளிக்கு சென்றனர். இதை அறிந்த ஆசிரியர் சம்பத்குமார், பள்ளியில் இருந்து தலைமறைவானார். ஆத்திரமடைந்த பெற்றோர், பள்ளியை முற்றுகையிட்டு, தலைமையாசிரியையிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். சக ஆசிரியர் ஒருவர் அங்கு வந்து, சம்பத்குமாருக்கு ஆதரவாக பேசினார்.
இதனால் ஆத்திரமடைந்த பெற்றோர், கற்கள் மற்றும் செருப்பை வீசி அவரை தாக்கினர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து, திண்டிவனம் அனைத்து மகளிர் போலீசார், ஆசிரியர் சம்பத்குமார் மீது வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனர்.
