UPDATED : ஜன 08, 2016 12:00 AM
ADDED : ஜன 08, 2016 11:29 AM
கும்மிடிப்பூண்டி
: பதினைந்து
கிராமங்களை இணைக்கும் சாலையில், பள்ளி நேரத்தில் இயக்கப்பட்ட அரசு பேருந்து
சேவை, நிறுத்தப்பட்டதால், போக்குவரத்து வசதியின்றி மாணவர்கள் தவிக்கின்றனர் என, ஒன்றிய கூட்டத்தில் கவுன்சிலர் புகார் தெரிவித்தார்.
கும்மிடிப்பூண்டி ஒன்றிய கவுன்சிலர் கூட்டம், அதன் தலைவர் குணம்மா தலைமையில் நேற்று நடைபெற்றது. பி.டி.ஓ., ராஜேந்திரபாபு, துணை தலைவர் நாகலட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். செலவு, அனுமதி, திட்டம் என, 63 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதை தொடர்ந்து, கவுன்சிலர்கள் தங்கள் பகுதி குறைகளை தெரிவித்தனர். புனிதவள்ளி (தி.மு.க.,): கீழ்முதலம்பேடு கிராமத்தில், ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்ட பின் குழாய் வைக்காமல் கிடப்பில் போடப்பட்டு உள்ளது.
முத்துசாமி (தி.மு.க.,): பல்லவாடா ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பழைய கட்டடம் அகற்றிய இடத்தில், வகுப்பறை பற்றாக்குறை கருதி கூடுதல் வகுப்பறையுடன் புதிய பள்ளி கட்டடம் நிறுவ வேண்டும். முருகன் (அ.தி.மு.க.,): பூவலம்பேடு முதல், பொம்மாஜிகுளம் வரையிலான மாநில நெடுஞ்சாலை வாகன போக்குவரத்துக்கு லாயக்கற்று மிகவும் மோசமாக உள்ளது.
தயாளன் (அ.தி.மு.க.,): கீழ்முதலம்பேடு முதல், ஏ.என்.குப்பம் வழியாக லட்சுமிபுரம் வரையிலான சாலையில், 15 கிராமங்கள் உள்ளன. அந்த தடத்தில் பள்ளி நேரத்தில் இயக்கப்பட்ட அரசு பேருந்து எண் 167, பல மாதங்களுக்கு முன் நிறுத்தப்பட்டது. இதனால் பள்ளி மாணவர்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாவதுடன் நேரத்திற்கு பள்ளிக்கு செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர். உடனடியாக நிறுத்தப்பட்ட பேருந்து சேவை மீண்டும் இயக்கப்பட வேண்டும்.
குறைகளை கேட்டறிந்த பி.டி.ஓ., அனைத்து பிரச்னைகள் மீதும், உடனடி நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.
