UPDATED : ஜன 09, 2016 12:00 AM
ADDED : ஜன 09, 2016 11:35 AM
சமூக பண்புகளையும், சுற்றுச்சூழல் கல்வியையும், மாணவர்களுக்கு கற்றுக்கொடுத்து, எதிர்காலத்தில், அவர்களின் பங்களிப்போடு, கிராமப்புறங்களை மேம்படுத்த வேண்டும் என்ற நோக்கத்துடன் சிறப்பு வகுப்புகளை நடத்தி வருகிறது ஒரு அரசுப்பள்ளி.
உடுமலை-பொள்ளாச்சி
ரோட்டில் அமைந்துள்ளது பூலாங்கிணர் அரசு மேல்நிலைப்பள்ளி. இப்பள்ளியில், 6 முதல் 7 ம் வகுப்பு வரை, 240 மாணவர்கள் படிக்கின்றனர்.
மாணவர்களுக்கு
இயற்கையின் இன்றிமையாமையை மனதில் பதிய வைக்கவும், சுற்றுச்சூழலை பாதுகாக்கவுமே நாட்டுநலப் பணிதிட்டங்கள், பசுமைப்படை, சுற்றுச்சூழல் மன்றங்கள் பள்ளிகளில்
செயல்படுகின்றன.
வழக்கமாக
நடக்கும் பிளாஸ்டிக் ஒழிப்பு, தெருக்களில் துாய்மை, விழிப்புணர்வு பேரணி என்ற நடைமுறைகள் இல்லாமல், மாறுபட்ட, சிந்தனையோடு, சுற்றுச்சூழல் நடவடிக்கைகளில் மாணவர்களின் பங்களிப்பை ஊக்கப்படுத்தி
வருகிறார் இப்பள்ளி நாட்டுநலப் பணிதிட்ட அலுவலர் சரவணன்.
ஒவ்வொரு
நாட்டுநலப் பணிதிட்ட முகாம்களின் போதும், பள்ளி மாணவர்கள்
ஒரு கிராமத்துக்குச்சென்று பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவது, குப்பைகளை துாய்மைப்படுத்துவது போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர்.
முகாம் முடிந்த ஓரிரு நாட்களிலயே அப்பகுதியில், சுகாதார பிரச்னை ஆரம்பமாகிவிடும்.
இதனால், ஒரு கிராமத்தை தேர்வு செய்து, கோஷங்கள் மூலமாக நடத்தும் பெயரளவிலான பேரணியாக இல்லாமல், பொதுமக்களிடம் பிளாஸ்டிக் பயன்பாடு மற்றும் சுகாதார சீர்கேட்டினால்
ஏற்படும் பிரச்னைகள் குறித்து மாணவர்களே விளக்குகின்றனர்.
முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக செய்த இப்பணியின் பிரதிபலனாக அக்கிராமம் பிளாஸ்டிக் பயன்பாடு குறைந்து, சுகாதாரத்திலும் முன்னோக்கிச் செல்கிறது. ஒவ்வொரு மாணவனின் செயல்பாட்டையும் உற்று நோக்கி, கல்வியாண்டு இறுதியில் சிறந்த மாணவர்களை பெருமைப்படுத்தும் விதமாக, அவர்களின் செயல்பாடுகளை புத்தகமாக வெளியிட்டு பள்ளி மாணவர்களை ஊக்கப்படுத்துகின்றனர்.
இச்செயல்பாடு மற்ற மாணவர்களை கல்வித்திறனிலும், கலைத்திறனிலும் போட்டி போட்டு பங்கேற்கும் ஆர்வத்தை துாண்டுகிறது. ஒரு கல்வியாண்டில் குறைந்த பட்சமாகவே முப்பதுக்கும் மேற்பட்ட விழிப்புணர்வு நாடங்களை மாணவர்களை முன்வந்து நடத்துகின்றனர். நுாலகத்துக்கென தனி ஆசிரியர் இல்லாததால், பல பள்ளிகளிலும் நுாலக பயன்பாடுகள் குறைந்துள்ளது.
இந்நிலையில்
நாட்டுநலப் பணிக்கென தனியொரு நுாலகத்தை அமைத்து, சுற்றுச்சூழல் விழிப்புணர்வு ஏற்படுத்துவது மட்டுமின்றி, இயற்கை பாதுகாப்பை ஒரு கடமையாகவும் கருதி செயல்பட மாணவர்களை
ஆயத்தப்படுத்துகின்றனர்.
நாட்டின் நலம், அந்நாட்டின் இயற்கை வளத்தில் உள்ளது என்பதை ஒவ்வொரு மாணவனின் மனதிலும் உறுதியாக விதைத்து வருகின்றனர் இப்பள்ளி ஆசிரியர்கள். அரசுப்பள்ளிகளின் தரத்தை தேர்ச்சி விகித்திலும், கட்டமைப்புகளிலும் மட்டுமின்றி, பாடத்தை கடந்த சமூக பண்புகளை வளர்க்கும் பள்ளித்தளமாகவும் விளங்குகிறது என்பதற்கு இப்பள்ளியும் ஒரு எடுத்துக்காட்டாய் விளங்குகிறது.
