UPDATED : ஜன 13, 2016 12:00 AM
ADDED : ஜன 13, 2016 11:30 AM
திருப்பூர்:
பட்டம் பெற்றாலே, படித்துவிட்டதாக அர்த்தமல்ல; வாழ்க்கை முழுவதும் தொடர்ந்து, படித்துக்கொண்டு இருப்பதே, கல்வி, என, முன்னாள்
எஸ்.பி., கலியமூர்த்தி பேசினார்.
திருப்பூர், கூலிபாளையம், வித்யாசாகர் பள்ளியில், நான்காம் ஆண்டு விழா நடைபெற்றது. விழாவில், முன்னாள் எஸ்.பி., கலியமூர்த்தி பேசியதாவது:கல்விக்கு நாம் அதிக முக்கியத்துவம் தந்தாலும், கல்வியின் பொருளை முழுமையாக புரிந்திருக்கவில்லை. நல்ல வேலைக்கு போகவும், பணம் சம்பாதிக்கவும் மட்டுமே கல்வி கற்பது என்பது பயனற்றது. பெற்றோரிடம் இருந்து பெறும் சொத்தை காட்டிலும், கற்ற கல்வியே மிகப்பெரிய சொத்து. பிறப்பு முதல் இறப்பு வரை, மனிதனை கல்வி காப்பாற்றும். கல்வியின் அருமை நமக்கு புரிய வேண்டும்; கல்வி இல்லாத வீடு, இருண்ட வீடு; படித்து பட்டம் பெற்றால் படித்துவிட்டதாக அர்த்தமல்ல; வாழ்க்கை முழுவதும் தொடர்ந்து, படித்துக்கொண்டே இருக்க வேண்டும். வாழ்க்கையை கற்றுக்கொண்டே இருக்க வேண்டும்.
உலகை மாற்றியமைக்கும் ஆயுதமாக கல்வி இருந்திருக்கிறது. கத்தியால் ஜெயித்ததை விட, யுக்தியால் வென்ற யுத்தங்களே அதிகம். வித்தியாசமான சிந்தனையே வெற்றியை தருகிறது. மனிதனுக்கு லட்சியம் முக்கியம். லட்சியம் இல்லாத வாழ்க்கை, முகவரி இல்லாத கடிதம் போன்றது.இவ்வாறு, அவர் பேசினார்.
முன்னதாக, பள்ளி சேர்மன் ஆண்டவர் ராமசாமி வரவேற்றார். பள்ளி முதல்வர் சசிரேகா, ஆண்டறிக்கை வாசித்தார். ஜெய்ஸ்ரீராம் பொறியியல் கல்லூரி தலைவர் தங்கராஜ், சவுத் இண்டியன் வங்கி மண்டல மேலாளர் சரவணன், பஞ்சாப் நேஷனல் வங்கி உதவி பொது மேலாளர் ஆன்கர் ஜீத் சிங், பில்டர்ஸ் அசோசியேஷன் திருப்பூர் மைய தலைவர் சண்முகராஜ், பள்ளி தாளாளர் சிவபிரியா உள்ளிட்டோர் பேசினர். மாணவ, மாணவியரின் கலைநிகழ்ச்சி நடந்தது.
