நீச்சல் பயிற்சியாளர் இல்லாததால் பெற்றோரே பயிற்சி அளிக்கும் நிலை
நீச்சல் பயிற்சியாளர் இல்லாததால் பெற்றோரே பயிற்சி அளிக்கும் நிலை
UPDATED : ஜன 14, 2016 12:00 AM
ADDED : ஜன 14, 2016 02:10 PM
மதுரை: மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் உள்ள நீச்சல் குளத்தில் மூன்று மாதங்களாக பயிற்சியாளர் இல்லை. இதனால் வீரர்களுக்கு அவர்களின் பெற்றோர் பயிற்சி அளிக்கும் நிலை உள்ளது.
விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் 2006ல் நீச்சல்குளம் அமைக்கப்பட்டது. ஐந்தாண்டுகளாக விஜயகுமார் பயிற்சியாளராக இருந்தார். தற்போது வரை அடிக்கடி பயிற்சியாளர்கள் மாற்றப்பட்டும், இல்லாமலும் பயிற்சி பெறுபவர்களை அலைக்கழிக்கும் நிலை உள்ளது. சென்னையை அடுத்து மதுரையில்தான் நீச்சல் பயிற்சி மூலம் வருமானம் ஈட்டப்படுகிறது.
இங்கு 120 பேர் பயிற்சி பெறுகின்றனர். இதில் 45 பேர் போட்டிகளில் பங்கேற்று வருகின்றனர். இவர்களுக்கு தொடர்ந்து ஒரே பயிற்சியாளரே பயிற்சியின் நுணுக்கங்களை கற்றுத்தந்தால் தான் போட்டிகளில் வெல்ல முடியும்.
மதுரை வீரர், வீராங்கனைகள் தேசிய அளவில் வெற்றி பெற்றாலும் இவர்களுக்கு பயிற்சி அளிப்பதற்கான சிறப்பு ஏற்பாடுகள் மேம்பாட்டு ஆணையத்தால் செய்யப்படவில்லை. கடந்த பிப்ரவரியில் இங்கு பயிற்சியாளராக இருந்த போலீஸ்காரர் காமராஜ், மீண்டும் அவரது துறைக்கு மாற்றப்பட்டார்.
அதன்பின் தற்காலிக பயிற்சியாளராக இருந்த ரமேஷ் இருமுறை மாற்றப்பட்டு, தற்போது அவரும் போலீஸ் துறைக்கு மாற்றப்பட்டுள்ளார். பயிற்சியாளர் இல்லாத நிலையில் வீரர்களின் பெற்றோர் தாங்களாகவே பிள்ளைகளுக்கு பயிற்சி அளிக்கின்றனர். சிறந்த வீரர்களை உருவாக்கி வரும் நீச்சல் குளத்திற்கு நிரந்தர பயிற்சியாளரை நியமிக்க ஆணையம் முன்வரவேண்டும்.
