UPDATED : ஜன 21, 2016 12:00 AM
ADDED : ஜன 21, 2016 10:04 AM
உடுமலை
: உடுமலை
சுற்றுப்பகுதியில் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ், 2 பொதுத்தேர்வு எழுதும் தனித்தேர்வர்கள், தேர்வு எழுத, திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு
அலைக்கழிக்கப்படுகின்றனர்.
கடந்தாண்டைப் போல், இந்தாண்டும் உடுமலையில் தேர்வு மையம் வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வுகள் மார்ச், ஏப்ரல் மாதங்களில் நடக்கிறது. ரெகுலர் மாணவர்களுக்கு பதிவு எண் வழங்கப்பட்டு, அதன்படி தேர்வு மையம் ஒதுக்கப்படுகிறது. தனித்தேர்வர்களுக்கோ, தேர்வர்களின் எண்ணிக்கை அடிப்படையில் தேர்வு மையம் ஒதுக்கப்படுகிறது.
திருப்பூர் மாவட்டம் உடுமலையில், ஒவ்வொரு ஆண்டும் சுமார், 500 தனித்தேர்வர்கள் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்வு எழுதுகின்றனர். பத்தாண்டுகளுக்கு முன்பு வரை, தனித்தேர்வர்களுக்கு உடுமலை நகரிலுள்ள அரசு ஆண்கள் அல்லது பெண்கள் மேல்நிலைப்பள்ளிகளில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டது.
தேர்வுத்துறை அலுவலர்கள், தேர்வு அறை கண்காணிப்பாளர்கள் நியமனத்தில், ஆசிரியர் பற்றாக்குறை காரணத்தை சுட்டிக்காட்டி, தனியார் பள்ளிகளில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டன. அங்கும் ஆசிரியர் பற்றாக்குறை, குறைவான தேர்வர்களின் எண்ணிக்கை என பல்வேறு காரணங்களை கூறி, பொள்ளாச்சியில் தேர்வு மையம் அமைக்கப்பட்டது.
2009ம் ஆண்டில் தனி மாவட்டமாக, திருப்பூர் பிரிக்கப்பட்ட பின், திருப்பூர் மற்றும் தாராபுரம் பகுதிகளில் தேர்வு மையங்களை அமைத்தனர். உடுமலை சுற்றுப்பகுதி கிராமங்களிலிருந்தும், வால்பாறை உட்பட மலைகிராமப் பகுதிகளிலிருந்தும், மாணவர்கள் உடுமலையில் தங்கி தனித்தேர்வுகளுக்கு பயிற்சி பெறுகின்றனர். இம்மாணவர்களுக்கு தாராபுரத்திலும், திருப்பூரிலும் தேர்வு மையம் அமைக்கப்படுவதால், அலைக்கழிப்புக்கு ஆளாகின்றனர்.
தனித்தேர்வு
எழுதுவோரில், பெரும்பாலானவர்கள் பணிக்கு செல்வோர்.
நேரமின்மையால் தேர்வு நுழைவுச் சீட்டுகளையே, ஓரிரு நாட்களுக்கு முன்னர் அல்லது தேர்வுக்கு முன்தினம்தான் பெறுகின்றனர்.
திருப்பூரில் தேர்வு மையம் ஒதுக்குவதால், உடுமலை
கிராமப்பகுதி மாணவர்களே பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். பஸ் வசதியில்லாமலும்,
திருப்பூரில் தங்கி தேர்வு எழுதும் பொருளாதார
வசதியில்லாமலும் தவிக்கின்றனர். இதனால் பல மாணவர்களால் குறிப்பாக, மாணவியரால் தேர்வு எழுத முடிவதில்லை. பல தேர்வர்கள், தேர்வு நாளன்று மையங்களை தேடி, தேடி தேர்வை கோட்டை விடுகின்றனர்.
இது குறித்து, தினமலர் நாளிதழில், தொடர்ந்து செய்தி வெளியானதால், கடந்தாண்டு பொதுத்தேர்வுக்கு, உடுமலையில் தேர்வு மையம் கிடைத்தது. நடப்பாண்டிலும் உடுமலை சுற்றுப்பகுதியிலுள்ள தனித்தேர்வர்களுக்கு, இங்கேயே தேர்வு மையம் ஒதுக்க வேண்டும் என, தேர்வர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
