UPDATED : ஜன 21, 2016 12:00 AM
ADDED : ஜன 21, 2016 10:08 AM
திருப்பூர்
: கடந்தாண்டை விட, பொதுத்தேர்வு தேர்ச்சி சதவீதம்
அதிகரிக்க, தாமதமின்றி சிறப்பு வகுப்பு நடத்த
வேண்டும், என, முதன்மை கல்வி அலுவலர் முருகன் அறிவுறுத்தினார்.
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி தலைமை ஆசிரியர்கள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம், நஞ்சப்பா மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நேற்று நடந்தது; 189 பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் பங்கேற்றனர்.கடந்தாண்டில் ஒவ்வொரு பள்ளியும், பிளஸ் 2 பொதுத்தேர்வில் பெற்ற தேர்ச்சி சதவீதம்; அதிகபட்ச தேர்ச்சி; தேர்ச்சி சதவீதம் குறைந்த பள்ளி. தற்போது நடந்து வரும் அரையாண்டு தேர்வில் மாணவர்கள் பெறும் மதிப்பெண், வருகைப்பதிவு குறித்து தலைமை ஆசிரியரிடம் தனித்தனியே கேள்வி எழுப்பப்பட்டது.
குறைந்த சதவீதம்
தேர்ச்சி பெற்ற பள்ளிகள், நடப்பாண்டு தேர்ச்சி விகிதத்தை
அதிகரிக்க, என்ன நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது என
கேள்வி எழுப்பப்பட்டது. கல்வித்தரத்தை மேம்படுத்த மேற்கொள்ளும் நடவடிக்கையை தலைமை
ஆசிரியர்கள் விளக்கினர். முருகன் பேசுகையில், அரையாண்டு தேர்வில் தேர்ச்சி சதவீதம் சரிந்துள்ள பள்ளிகளில், காலை, மாலை சிறப்பு வகுப்பு நடத்தி, மதிப்பெண் குறைவான மாணவர்களுக்கு கற்றல் திறன் பயிற்சி அளிக்க
வேண்டும். பின்தங்குபவர்களை கண்டறிந்து சனி, ஞாயிறு முழுநேர வகுப்பு நடத்த வேண்டும். கடந்தாண்டை விட, பொதுத்தேர்வில் தேர்ச்சி சதவீதம் அதிகரிக்க, தாமதமின்றி சிறப்பு வகுப்பு நடத்த வேண்டும், என்றார்.
புத்தகம்
வெளியீடு
ஆங்கில பாடத்தை
படிப்பதிலும், புரிந்து கொள்வதிலும் மாணவர்களுக்கு
சிரமங்கள் இருந்தன. குறிப்பாக, அரசு பள்ளியில் படித்து, ஆங்கில வழியில் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் தேர்வில் தடுமாறி
வந்தனர். இதை தவிர்க்க, ஆங்கில இலக்கணம் அடங்கிய, 64 பக்க புத்தகம் தலைமை ஆசிரியருக்கு வழங்கப்பட்டது. ஆங்கிலம் கற்க
திணறும் மாணவர்களுக்கு, அப்புத்தகத்தை வழங்க
அறிவுறுத்தப்பட்டது.
இணைய தள முகவரி
திருப்பூர் மாவட்ட கல்வித்துறைக்கென பிரத்யேக இணையதள முகவரி, www.ceotiruppur.in உருவாக்கப்பட்டது; இதில், திருப்பூர் மாவட்ட பள்ளி கல்வித்துறை வரலாறு, பள்ளிகள் விவரம், தொலைபேசி எண், படங்கள் இடம் பெற்றுள்ளன. கல்வித்துறை சார்ந்த தகவல், தேர்வுக்கு விண்ணப்பிப்பது உள்ளிட்ட விவரங்கள் விரைவில் இணைக்கப்படும், என, கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
