தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/10ம் வகுப்பு பொது தேர்வு; தேர்வுத்துறை நடவடிக்கை

10ம் வகுப்பு பொது தேர்வு; தேர்வுத்துறை நடவடிக்கை

10ம் வகுப்பு பொது தேர்வு; தேர்வுத்துறை நடவடிக்கை


UPDATED : மார் 14, 2016 12:00 AM

ADDED : மார் 14, 2016 04:19 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மார் 14, 2016 12:00 AM ADDED : மார் 14, 2016 04:19 PM


Follow on Google
அ நிறம் | அளவு

இத்தேர்வுகள் தொடர்பான விவரங்கள் மற்றும் அரசுத் தேர்வுத்துறையால் மேற்கொள்ளப்பட்டுள்ள ஏற்பாடுகள் பற்றின செய்திக்குறிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன் விவரம்

புள்ளி விவரங்கள்:

இடைநிலைப் பொதுத் தேர்வினை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 12,054 பள்ளிகளிலிருந்து மொத்தம் 10,72,223 மாணவ/மாணவியர்கள் (தனித் தேர்வர்கள் உட்பட) தேர்வெழுத பதிவு செய்துள்ளனர்.  பள்ளி மாணவ/மாணவியர்களில் மாணவர்கள் 5,14,798 பேர், மாணவியர் 5,08,852 பேர் ஆவர். மாணவிகளை விட 5,946 மாணவர்கள் கூடுதலாக தேர்வெழுதுகின்றனர்.  பள்ளி மாணவர்களை தவிர 48,573 தனித்தேர்வர்களும் தேர்வெழுத பதிவு செய்துள்ளனர். 

சென்னை மாநகரில் 574 பள்ளிகளிலிருந்து மொத்தம் 53,168 மாணவ/மாணவியர்கள் 209 தேர்வு மையங்களில் தேர்வெழுத உள்ளனர். இவர்களில் 25,795 மாணவர்கள் மற்றும் 27,373 மாணவிகள் உள்ளடங்குவர். 

புதுச்சேரியில் அமைக்கப்பட்டுள்ள 48 தேர்வு மையங்களில், 298 பள்ளிகளைச் சார்ந்த 17,041 மாணவ/மாணவியர் தேர்வெழுத உள்ளனர். அவர்களில் மாணவர்கள் 8346 பேர் மற்றும் மாணவியர் 8695 பேரும் ஆவர். தமிழ் நாடு மற்றும் புதுச்சேரி முழுவதுமாக இடைநிலைப் பொதுத் தேர்விற்கு மொத்தம் 3369 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 

இவ்வாண்டிற்கான இடைநிலைப் பொதுத் தேர்வினை 250 சிறைவாசிகள் பாளையங்கோட்டை, திருச்சி, கோயமுத்தூர் மற்றும் புழல் சிறையில் அமைக்கப்பட்டுள்ள தேர்வு மையத்தில் தேர்வெழுதவுள்ளனர். 

இடைநிலைப் பொதுத் தேர்வினை தமிழ் வழியில் பயின்று தேர்வெழுதும் பள்ளி மாணாக்கருக்கு தேர்வுக் கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்களிக்கப்பட்டு வருகிறது.  இவ்வாண்டு தமிழ் வழியில் பயின்று இடைநிலைத் தேர்வினை எழுதவுள்ள பள்ளி மாணாக்கரின் எண்ணிக்கை 6,70,814 ஆகும்.

மாற்றுத் திறனாளி தேர்வர்கள்:

இடைநிலைப் பொதுத் தேர்வில் டிஸ்லெக்சியா பாதிக்கப்பட்ட மாணவர்கள், கண்பார்வையற்றோர், காதுகேளாதோர்/வாய்பேசாதோர் மற்றும் இதர மாற்றுத் திறனாளித் தேர்வர்களுக்கான  சலுகைகள் (சொல்வதை எழுதுபவர் நியமனம், மொழிப் பாடவிலக்களிப்பு, கூடுதல் ஒரு மணி நேரம்) சுமார் 3,679 தேர்வர்களுக்கு அரசுத் தேர்வுகள் இயக்குநரால் ஒப்பளிக்கப்பட்டு ஆணையிடப்பட்டுள்ளது.  மேலும் அவர்களுக்கு தேர்வு மையங்களில் தரைதளத்தில் தேர்வெழுதும் வகையில் தனி அறைகள் ஒதுக்கிடவும் அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது.  

தேர்வுக்கூட நுழைவுச் சீட்டு:

தமிழகமெங்கும் இடைநிலைத் தேர்வினை எழுதவுள்ள அனைத்து பள்ளி மாணவர்கள்/ தனித்தேர்வர்கள் ஆகியோருக்கு தேர்வுக்கூட நுழைவுச்சீட்டுகள் ஆன்-லைன் மூலமாக பதிவேற்றம் செய்யப்பட்டு அனுப்பப்பட்டு விட்டது. இவ்வாண்டு முதன்முறையாக தேர்வுக்கூட நுழைவுச் சீட்டில் தேர்வர்களுக்கான சிறப்பு அறிவுரைகள் அச்சிடப்பட்டு வழங்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக வினாத்தாள் மற்றும் விடைத்தாட்களில் வழக்கமாக அச்சிடப்படும் அறிவுரைகளை தேர்வுக்கு முன்னதாகவே தேர்வர்கள் தேர்வுக்கூட நுழைவுச் சீட்டுகளின் மூலமாகவே படித்து அறிந்துக் கொள்ளலாம்.

தேர்வு எழுதுபொருட்கள்:

அனைத்து தேர்வு மையங்களுக்கும் தேவையான எண்ணிக்கையில் முதன்மை விடைத்தாட்கள், கூடுதல் விடைத்தாட்கள் மற்றும் முகப்புச் சீட்டுகள் ஆகியவை அனுப்பி வைக்கப்பட்டுவிட்டன. தேர்வின் போது தேர்வர்களது புகைப்படம், பதிவெண், பாடம் முதலான விவரங்கள் அச்சிடப்பட்ட முகப்புச் சீட்டுகள் முதன்மை விடைத்தாளுடன் இணைத்து தைக்கப்பட்டே தேர்வர்களுக்கு வழங்கப்படுகிறது. தேர்வர் முகப்புச் சீட்டில் அச்சிடப்பட்டுள்ள விவரங்களை சரிபார்த்து கையொப்பமிட்டால் மட்டுமே போதுமானது.

வழித்தடங்கள்:

அனைத்து மாவட்டங்களிலும் வழித்தடங்கள் அமைக்கப்பட்டு, ஒவ்வொரு தேர்வு நாளன்றும் வழித்தட அலுவலர்கள் மூலமாக வினாத்தாள் கட்டுக்கள் கட்டுக்காப்பு மையங்களிலிருந்து பாதுகாப்பான முறையில் தேர்வு மையங்களுக்கு கொண்டு சென்று ஒப்படைக்கப்படவும் தேர்வு முடிவுற்றவுடன்  அனைத்து தேர்வு மையங்களிலிருந்தும் விடைத்தாள் கட்டுக்களை பாதுகாப்பான முறையில் விடைத்தாள் சேகரிப்பு மையத்திற்கு கொண்டு சென்று ஒப்படைக்கப்படவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

பாதுகாப்பு ஏற்பாடுகள்:

வினாத்தாள் கட்டுக்காப்பு மையங்கள் பாதுகாப்பான இடங்களில் அமைக்கப்பட்டுள்ளன.  மேலும் அவ்விடங்களில் 24 மணி நேர ஆயுதம் தாங்கிய காவலர் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. தேர்வு மையங்களில் குடிநீர், இருக்கை, மின்சாரம், காற்றோட்டம், வெளிச்சம் மற்றும் கழிப்பிட வசதிகள் சிறப்பான முறையில் அமைத்திட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. 

தேர்வு மையங்களில் தடையற்ற மின்சாரம் வழங்கிட ஆவன செய்யுமாறு மின்சார வாரிய தலைவருக்கு கடிதம் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் தேர்வு மையங்கள், வினாத்தாள் கட்டுக்காப்பு மையங்கள், விடைத்தாள் சேகரிப்பு மையங்கள் ஆகிய இடங்களில் போதிய காவல் பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டி காவல் துறைத் தலைவருக்கும் கடிதம் அளிக்கப்பட்டுள்ளது.  மேலும் இத்தேர்வினை எவ்வித புகார்களுக்கும் இடம் அளிக்காவண்ணம் செம்மையாக நடத்திட அனைத்து வகையிலும் ஒத்துழைப்பு நல்க கோரி அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்கள், மாவட்டக் கல்வி அலுவலர்கள், மெட்ரிக் பள்ளி ஆய்வாளர்கள் மற்றும் மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர்கள் ஆகியோருக்கான ஆய்வு அலுவலர்கள் கூட்டம் நடத்தப்பட்டு தேர்வுப் பணிகளில் எவ்வித சுணக்கமுமின்றி பொறுப்புடன் செயலாற்றுமாறு அனைவருக்கும் அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது.

கண்காணிப்பு ஏற்பாடுகள்
:

அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் மாவட்டத் தேர்வுக்குழு அமைக்கப்பட்டுள்ளது.  அவர்கள் கல்வித் துறை அலுவலர்களுடன் இணைந்து செயல்படுவர்.  அக்குழுவில் மாவட்டக் காவல் துறை கண்காணிப்பாளர், மாவட்ட வருவாய் அலுவலர், சார் ஆட்சியர், வருவாய் கோட்டாட்சியர் ஆகியோரும் இடம் பெற்றுள்ளனர்.  

அவர்கள் மாவட்டங்களுக்கு அவரவர் எல்லைக்குட்பட்ட தேர்வு மையங்களை திடீர் பார்வையிட்டு முறைகேடுகள், ஒழுங்கீனச் செயல்கள் ஏதும் நடைபெறா வண்ணம் தீவிரமாகக் கண்காணித்திட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

அலைபேசி தடை:

தேர்வு மைய வளாகத்திற்குள் அலைபேசியை எடுத்து வருதல் முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. தேர்வர்கள் தங்களுடன் அலைபேசியை கண்டிப்பாக எடுத்துவருதல் கூடாது.  மேலும் தேர்வர்களது அலைபேசிகள் பராமரிப்பிற்கு தேர்வு மையங்கள் பொறுப்பேற்காது. அத்துடன் தேர்வு பணியில் ஈடுபடும் ஆசிரியர்களும் தேர்வறையில் தங்களுடன் அலைபேசியை வைத்திருப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இவ்வறிவுரையை மீறி தேர்வர்களோ அல்லது ஆசிரியர்களோ அலைபேசி/இதர தகவல் தொடர்பு சாதனங்களை வைத்திருப்பதாக கண்டறியப்பட்டால் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

ஒழுங்கீனச் செயல்பாடுகள்:

தேர்வு நேரங்களில் தேர்வர்கள் துண்டுத்தாள் வைத்திருத்தல், துண்டுத்தாட்களை பார்த்து எழுத முயற்சித்தல், பிற மாணவர்களை பார்த்து எழுதுதல், தேர்வு அதிகாரியிடம் முறைகேடாக நடந்து கொள்ளுதல், விடைத்தாள் மாற்றம் செய்தல், விடைத்தாளில் தாம் எழுதிய அனைத்து விடைகளையும் தாமே கோடிட்டு அடித்தல் மற்றும் ஆள்மாறாட்டம் செய்தல் ஆகிய ஒழுங்கீனச் செயல்களில் ஈடுபட்டால் கடுங்குற்றமாக கருதப்படும். அத்தகைய செயல்களில் ஈடுபடுவோருக்கு விதிமுறைகளின்படி உரிய தண்டனைகள் வழங்கப்படும். 

மேலும் ஒழுங்கீனச் செயல்களுக்கு உடந்தையாகவோ, ஊக்குவிக்கவோ பள்ளி நிர்வாகம் முயலுமேயானால் பள்ளித் தேர்வு மையத்தினை இரத்து செய்தும், பள்ளி அங்கீகாரத்தினை இரத்து செய்திட பள்ளிக் கல்வி இயக்குநருக்கு பரிந்துரை செய்தும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ளது.


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us