UPDATED : மார் 15, 2016 12:00 AM
ADDED : மார் 15, 2016 10:46 AM
சென்னை:
அடிப்படை வாழ்க்கைக்கு கணிதமே அவசியம், என, அமுதசுரபியின் ஆசிரியர் திருப்பூர்
கிருஷ்ணன் பேசினார்.
பை கணித மன்றத்தின் நிறுவனரும், பேராசிரியருமான சிவராமனின், கணித வரலாறும் பயனும், எதிலும் கணிதம் ஆகிய இரண்டு நுால்களின் வெளியீட்டு விழா, 691 பப்ளிஷர்ஸ் சார்பில் நேற்று, கீழ்ப்பாக்கத்தில் நடைபெற்றது. நுால்களை வெளியிட்டு, அமுத சுரபியின் ஆசிரியர், திருப்பூர் கிருஷ்ணன் பேசியதாவது: அறிவியல் துறை சார்ந்த விஷயங்களை, சாதாரண மக்களுக்கும் புரியும் வகையில், பெ.நா.அப்புசாமி, தமிழில் எழுதி வந்தார். பின், சுஜாதா அதே வழியை பின்பற்றினார்.
அதே போல், கணிதம் சார்ந்த விஷயங்களை, எளிய மக்களும் புரிந்து கொள்ளும் தமிழில் எழுதுவதில் சிவராமன் முன்னோடியாக இருக்கிறார். இது போன்று, அனைத்து துறைகளிலும் தமிழில் நுால்கள் வர வேண்டும். வாழ்க்கையில், அடிப்படை வாழ்க்கை, மேலான வாழ்க்கை என, இரண்டு நிலைகள் உள்ளன. அடிப்படை வாழ்க்கைக்கு கணித அறிவு முக்கியம்; மேலான வாழ்க்கைக்கு எழுத்தறிவும் வேண்டும். அதனால் தான், நம் முன்னோர்கள், எண்ணும் எழுத்தும் கண்ணென தகும், எண்ணென்ப ஏனை எழுத்தென்ப என்னும் சொற்றொடர்களில், எண்ணை முதலில் வைத்தனர்.
கணிதம், நம் அன்றாட வாழ்க்கையில் அனைத்து இடங்களிலும் வருகிறது. வட்ட பரப்பே அதிக கொள்ளளவு கொண்டது என்பதை நம் முன்னோர்கள் அறிந்ததால் தான், கிணற்றை வட்டவடிவில் அமைத்தனர். ஸ்ரீ சக்கரம், கோவில் பிரகாரங்கள் அனைத்தும் சதுர, செவ்வக வடிவில் இருப்பதற்கும் கணிதமே காரணங்களாக உள்ளன. தற்காலத்திய, அலைபேசிகள், ஏ.டி.எம்., மையங்கள் உள்ளிட்ட பல்வேறு கருவிகள், கணிதத்தையே அடிப்படையாக கொண்டுள்ளன. இவ்வாறு அவர் பேசினார்.
நுால்களை பெற்றுக்கொண்ட, தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப கழகத்தின் செயலாக்க இயக்குனர் அய்யம்பெருமாள் பேசியதாவது: டி.கே.எஸ்.ஸ்ரீனிவாசன், தமிழில் கணிதத்தை வளர்த்தார். தற்போது, அதே பணியை சிவராமன் சிறப்பாக செய்கிறார். எகிப்தியர்களின் கணித அறிவு, வானியல் சார்ந்த கணிதங்கள், புதிர் கணிதங்கள், லெபோம்போ எலும்பின் மூலம் கிரகண கணிதங்கள் போன்ற பல்வேறு விஷயங்களை அலசி உள்ளார். இவ்வாறு அவர் பேசினார்.
