UPDATED : மார் 19, 2016 12:00 AM
ADDED : மார் 19, 2016 11:10 AM
சென்னை பல்கலையின் சிண்டிகேட் கூட்டத்தில், பல்கலை ஒருங்கிணைப்பு குழு உறுப்பினராக இருந்த பேராசிரியர் திடீரென நீக்கப்பட்டு, அவருக்கு பதில், ஓய்வு பெற்றவரை நியமனம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
துவங்கவே
இல்லை:
சென்னை பல்கலையின் மாதாந்திர சிண்டிகேட் கூட்டம், நேற்று பிற்பகல், 2:30 மணிக்கு நடப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. சிண்டிகேட் உறுப்பினர்கள், கூட்டத்துக்கு வந்திருந்த நிலையில், ஒரு மணி நேரமாக கூட்டம் துவங்கவே இல்லை. ஒருங்கிணைப்பு குழு தலைவரும், உயர்கல்வித் துறை செயலருமான அபூர்வா வந்ததும், 3:30 மணிக்கு கூட்டம் துவங்கியது.
பல்கலைகளின் வழக்கமான செலவினங்களுக்கு, சிண்டிகேட் உறுப்பினர்கள் அனுமதி அளித்தனர். அதன்பின், பல்கலையின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் அபூர்வா திடீரென அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். எனக்கு ஒரு கடிதம் வந்துள்ளது. அதன் படி, பல்கலையின் சீனியாரிட்டி அந்தஸ்தில், முதலிடத்தில் பேராசிரியர் ஸ்ரீமன் நாராயணன் உள்ளார். எனவே, தற்போது ஒருங்கிணைப்பு குழு உறுப்பினராக உள்ள பொருளியல் துறை தலைவர் ஜோதி சிவஞானத்திற்கு பதில், ஸ்ரீமன் நாராயணன் நியமிக்கப்படுகிறார் என, அறிவித்து விட்டு சென்றார். இதனால், சிண்டிகேட்டில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
சட்டசபை தேர்தல் நடத்தை விதி அமலுக்கு வந்துள்ள நிலையில், திடீரென, மூன்று மாதங்களுக்கு பின், ஒருங்கிணைப்பு குழு உறுப்பினர் நீக்கப்பட்டது விதி மீறல் என, சென்னை பல்கலை சிண்டிகேட் உறுப்பினர் சிலர் தெரிவித்தனர்.
இது குறித்து,
சென்னை பல்கலை வட்டாரங்கள் கூறியதாவது:
சென்னை பல்கலைக்கு மத்திய அரசிடம் இருந்து வந்த நிதியில், சில முறைகேடுகள் நடந்துள்ளதாக, புகார்கள் எழுந்துள்ளன. இந்த புகார் குறித்து, விசாரணை எதுவும் வந்து விடக்கூடாது என்பதற்காக, ஒருங்கிணைப்பு குழுவில் அதிரடி மாற்றம் நடந்துள்ளதாக தெரிய வருகிறது.
வழங்க முடியாது:
மேலும், புதிய உறுப்பினர் ஸ்ரீமன் நாராயணன், பல்கலையின் பகுப்பாய்வு வேதியியல் துறை பேராசிரியராக பணியாற்றி, 2015 அக்டோபரில் ஓய்வு பெற்றுவிட்டார்; தற்போது, தற்காலிக பணியில் உள்ளார். அவருக்கு சீனியாரிட்டியோ, பல்கலையின் மற்ற அதிகாரிகளுக்கான சலுகைகளோ வழங்க முடியாது.
எனவே, அவரை உறுப்பினராக அமர்த்தியது, விதி மீறல் மட்டுமின்றி, தேர்தல் நடத்தை விதி மீறலும் ஆகும். இது குறித்து, தேர்தல் கமிஷன் தலையிட்டு விசாரணை நடத்த வேண்டும். இவ்வாறு பல்கலை வட்டாரங்கள் கூறின.
