UPDATED : மார் 24, 2016 12:00 AM
ADDED : மார் 24, 2016 11:18 AM
மருத்துவம், பொறியியல், பி.பார்ம், நர்சிங், எல்.எல்.பி., ஆகிய தொழிற்கல்வி சேர்க்கை விண்ணப்பங்கள், பல்வேறு அதிரடி மாற்றங்களுடன், மே மாதம் முதல் ஆன் லைன் மூலம் வினியோகிக்க திட்டமிடப் பட்டுள்ளது.
புதுச்சேரி மாநிலத்தில் அரசு மற்றும் தனியார் மருத்துவம், பொறியியல் கல்லுாரிகளில், முதலாமாண்டு மாணவர் சேர்க்கை, சென்டாக் மூலம் நடத்தப்படுகிறது.
கடந்த 2014ம் ஆண்டு மருத்துவக் கல்லுாரி மாணவர் சேர்க்கையின்போது, தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் சிலர் போலி சான்றிதழ் கொடுத்து, புதுச்சேரி கல்லுாரிகளில் சேர்ந்தது தெரியவந்தது. இதன் எதிரொலியாக, கடந்தாண்டு சென்டாக் மாணவர் சேர்க்கையின் போது தீவிர கண்காணிப்பு இருந்தது.
அதிரடி மாற்றம்
இந்த ஆண்டும் பல்வேறு அதிரடி மாற்றங்களுடன், கவுன்சிலிங் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அத்துடன், அம்பேத்கர் அரசு சட்டக் கல்லுாரியில் உள்ள ஐந்தாண்டு, மூன்றாண்டு சட்டப் படிப்புகளுக்கும் சென்டாக் மூலம் கவுன்சிலிங் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஆள் மாறாட்டம் மற்றும் போலி சான்றிதழ் புகார் எதிரொலியாக, கடந்தாண்டு எம்.பி.பி.எஸ்., படிப்பில் சேர்ந்த அனைத்து மாணவர்களின் புகைப்படத்துடன், சேர்க்கை பட்டியல் வெளியிடப்பட்டது.
புதிய சாப்ட்வேர்
இந்தாண்டும் எம்.பி.பி.எஸ்., மட்டுமின்றி, பி.டெக்., பல் மருத்துவம், நர்சிங், பிசியோதெரபி உள்பட அனைத்து படிப்புகளில் சேர்ந்த மாணவர்களைப் பற்றிய விபரம், புகைப்படத்துடன் வெளியிடப்பட உள்ளது. இடம் கிடைத்ததும் கல்லுாரியில் சேர மாணவர்களுக்கு வழங்கப்படும் அட்மிட் கார்டுகளிலும் மாணவர்களது புகைப்படம் இடம் பெற உள்ளது. இதற்கான சாப்ட்வேர் மேம்படுத்தும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது.
ஆன்-லைன் விண்ணப்பம்
கடந்தாண்டைப் போலவே இந்தாண்டும் ஆன்-லைன் மூலம் விண்ணப்பங்களை வினியோகிக்க சென்டாக் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
சென்டாக்கின் www.centaconline.in என்ற இணையதளத்தில், மே 9ம் தேதி முதல் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். ஆன்-லைனில் மே 25ம் தேதி வரை விண்ணப்பம் கிடைக்கும். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை மே 30ம் தேதிக்குள் சென்டாக் அலுவலத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்
பொறியியல் படிப்பிற்கு மட்டும் விண்ணப்பித்தால் 500 ரூபாய் கட்டணம். பொறியியல் மற்றும் மருத்துவம் ஆகிய இரண்டிற்கும் சேர்த்து விண்ணப்பித்தால் 750 ரூபாய் கட்டணம்.
பொறியியல், மருத்துவம், பி.பார்ம் ஆகிய மூன்று படிப்பிற்கும் சேர்த்து விண்ணப்பித்தால்,1000 ரூபாய் கட்டணம். எஸ்.சி., பி.டி., பிரிவினருக்கு முறையே 250 ரூபாய், 375 ரூபாய், 500 ரூபாய் என, கட்டணம் நிர்ணயிக்கப் பட்டுள்ளது. சட்டப் படிப்பிற்கு, பொதுப் பிரிவினருக்கு 500 ரூபாய், எஸ்.சி., எஸ்.டி., பி.டி., பிரிவினருக்கு 250 ரூபாய் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
கடந்தாண்டு ஆன்-லைன் கவுன்சிலிங் அறிவிக்கப்பட்டு, கடைசி நேரத்தில் வாபஸ் பெறப்பட்டது. இந்தாண்டு ஆன்-லைன் கவுன்சிலிங் குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.
எவ்வித குழப்பமும் இல்லாமல் கவுன்சிலிங் நடத்த திட்டமிட்டுள்ள சென்டாக் நிர்வாகம், ஆன்-லைன் விண்ணப்பம் வழங்கும் பணிக்கான ஆயத்த நடவடிக்கைகளை முடுக்கி விட்டுள்ளது.
