துணைவேந்தர் பதவி காலி; பல்கலை பட்டமளிப்பு விழா ரத்து
துணைவேந்தர் பதவி காலி; பல்கலை பட்டமளிப்பு விழா ரத்து
UPDATED : மார் 25, 2016 12:00 AM
ADDED : மார் 25, 2016 11:27 AM
சென்னை பல்கலை துணைவேந்தர் பதவி காலியாக உள்ளதால், அடுத்த மாதம் நடக்க வேண்டிய பட்டமளிப்பு விழா ரத்து செய்யப்பட்டுள்ளது. இனி, செப்டம்பரில் தான், மாணவர்களுக்கு பட்டம் கிடைக்கும்.சென்னை பல்கலை துணைவேந்தராக இருந்த தாண்டவன், ஜனவரி, 17ல் ஓய்வு பெற்றார்.
அவருக்கு பின், புதிய துணைவேந்தரை முடிவு செய்ய, அரசு சார்பில் தேடல் குழு அமைக்கப்பட்டது. இந்த குழுவினர் ஒவ்வொரு வாரமும் கூட்டம் நடத்தி, புதிய துணைவேந்தருக்கான விண்ணப்பங்களை பெற்றனர்.
மொத்தம், 15 பேர் விண்ணப்பித்த நிலையில், இறுதி பட்டியலும் தயாரானது. ஆனால், அரசியல் பிரச்னை, கல்வியாளர்களின், ’ஈகோ’ பிரச்னை, உயர் அதிகாரிகளின் தலையீடு போன்றவற்றால், துணைவேந்தர் தேர்வு தள்ளி போனது. அதற்குள், சட்டசபை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால், துணைவேந்தர் தேர்வு பணி கிடப்பில் போடப்பட்டது.
துணைவேந்தர் இல்லாமல், சென்னை பல்கலையின் நிர்வாக பணிகள் முடங்கியுள்ளன. முதுகலை மற்றும் ஆராய்ச்சி மாணவர்களுக்கான பட்டமளிப்பு விழா ஒவ்வொரு ஆண்டும், ஏப்ரலில் நடக்கும். துணைவேந்தர் தான் சான்றிதழ்களில் கையெழுத்திட வேண்டும். தற்போது பொறுப்பில் உள்ள உயர்கல்வி செயலர் அபூர்வா தலைமையிலான குழுவினருக்கு இந்த அதிகாரம் கிடையாது. எனவே, ’ஏப்ரலில் நடக்க வேண்டிய பட்டமளிப்பு விழா ரத்து செய்யப்பட்டுள்ளது’ என, பல்கலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. புதிய துணைவேந்தர் வந்த பின், செப்டம்பரில் பட்டமளிப்பு விழா நடத்தப்படும். அதுவரை மாணவர்கள், பட்டம் கிடைக்காமல், உயர்கல்விக்கோ, வேலைக்கோ செல்ல முடியாமல் அவதிப்பட வேண்டிய நிலைக்கு ஆளாகி உள்ளனர்.
