UPDATED : ஏப் 01, 2016 12:00 AM
ADDED : ஏப் 01, 2016 11:38 AM
பெங்களூரு:
கர்நாடகாவில், பி.யூ.சி.,வேதியியல் தேர்வு வினாத்தாள், இரண்டாவது முறையாக வெளியானதால், மாணவர்கள், அரசுக்கு எதிராக போராட்டத்தில்
குதித்துள்ளனர். இதனால், கர்நாடகவில் பதற்றம் நிலவுகிறது.
தேர்வு
ரத்து:
கர்நாடகாவில், முதல்வர் சித்தராமையா தலைமையிலான காங்., ஆட்சி நடக்கிறது. இங்கு, கடந்த, 21ல், இரண்டாம் ஆண்டு, பி.யூ.சி., வேதியியல் தேர்வு நடந்தது.
தேர்வுக்கு முன், கோலார் மாவட்டம் மாலுார், பல்லாரி மாவட்டம் காந்தி நகர் பகுதிகளில் வினாத்தாள் வெளியானதாக பரபரப்பு ஏற்பட்டது. இதனால் அந்த தேர்வு ரத்து செய்யப்பட்டது. மார்ச், 31ல், மறுதேர்வு நடத்துவதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், நேற்று காலை, தேர்வு துவங்கும் முன், மறுதேர்வு வினாத்தாள் வெளியானதாக பரபரப்பு ஏற்பட்டது. இதனால், மறுதேர்வும் ரத்து செய்யப்பட்டது. இதைக் கேள்விப்பட்டதும், தேர்வு மையத்தில் தேர்வு எழுத தயாராக இருந்த மாணவர்களிடையே கொந்தளிப்பு ஏற்பட்டது. பெங்களூரில் உள்ள, பி.யூ.சி., வாரிய அலுவ லகம் சென்ற மாணவர்களும், பெற்றோரும், போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மதச் சார்பற்ற ஜனதா தள தலைவர் குமாரசாமி உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்களும், இந்த போராட்டத்தில் பங்கேற்றனர். மாணவர்கள், ஊர்வலமாக சென்று, சட்டசபையை முற்றுகையிட முயற்சித்தனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தியதால், இருதரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
பரவிய
போராட்டம்:
பெங்களூரில் நடந்த போராட்டம், மைசூரு, துமகூரு, பல்லாரி, மாண்டியா, கோலார், உடுப்பி, விஜயபுரா, ஹாசன் உட்பட பல மாவட்டங்களில் வேகமாக பரவியது. மாநிலம் முழுவதும் மாணவர்கள் போராட்டத்தில் இறங்கியதால், பெரும் பதற்றம் உருவானது.
40 அதிகாரிகள் சஸ்பெண்ட்:
சட்டசபையிலும் இந்த பிரச்னை எதிரொலித்தது. எதிர்க்கட்சியான பா.ஜ., அமளியில் ஈடுபட்டதால், சபை ஒத்தி வைக்கப்பட்டது.
இதையடுத்து, கல்வி துறை அதிகாரிகளுடன், முதல்வர் சித்தராமையா அவசர ஆலோசனை நடத்தினார். இதன் அடிப்படையில், பி.யூ.சி., வாரியத்தின், 40 அதிகாரிகள் உடனடியாக, சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். வேதியியல் தேர்வு, மூன்றாவது முறையாக, ஏப்ரல், 12ல், நடக்கும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.
