UPDATED : ஏப் 05, 2016 12:00 AM
ADDED : ஏப் 05, 2016 02:26 PM
இதில், ஆயிரக்கணக்கான மாணவ, மாணவியர் குடும்பத்துடன் பங்கேற்று, உயர்கல்விக்கான ஆலோசனைகளை பெற்றனர். பிளஸ் 2 படிப்புக்கு பின், உயர்கல்வியில் என்ன படிக்கலாம்; எங்கு படிக்கலாம் என்ற சந்தேகங்களுக்கு விடை அளிக்கும் வகையில், தினமலர் நாளிதழ் சார்பில், வழிகாட்டி நிகழ்ச்சி ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது.
இந்த ஆண்டு, பாரத் பல்கலையுடன் இணைந்து, வழிகாட்டி நிகழ்ச்சி நடத்தப்பட்டது. சென்னை, ராயப்பேட்டை, ஒய்.எம்.சி.ஏ., மைதானத்தில், ஏப்., 2 முதல் நேற்று வரை, தொடர்ந்து மூன்று நாட்கள் நடந்த நிகழ்ச்சியில், ஆயிரக்கணக்கான மாணவ, மாணவியர் பெற்றோருடன் பங்கேற்று, ஆலோசனைகளை பெற்றனர்.
கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா நிறுவனத்துடன் இணைந்து நடத்தப்பட்ட இந்த நிகழ்ச்சியின், நேற்றைய கருத்தரங்கில் கல்வியாளர்கள் ரமேஷ் பிரபா, ஜெயப்பிரகாஷ் காந்தி, டி.சி.எஸ்., துணைத் தலைவர் ஹேமா கோபால், பாரத் பல்கலையைச் சேர்ந்த ஹமீத் ஹூசைன் மற்றும் வங்கி முன்னாள் அதிகாரி வணங்காமுடி ஆகியோர், உயர்கல்வி குறித்த கருத்துகளை பகிர்ந்து கொண்டனர்.
சென்னை இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி நிறுவனத்துடன் இணைந்து நடத்தப்பட்ட இந்த நிகழ்ச்சியில், 100க்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்களின் அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன. அவற்றில், மாணவ, மாணவியர் நேரடியாக கல்லுாரிகள் மற்றும் பாடப்பிரிவுகள் குறித்தும், அப்ளிகேஷன் முதல் அட்மிஷன் வரையிலான நடைமுறைகள் குறித்தும் கேட்டு தெரிந்து கொண்டனர்.
மாணவர்களிடம் பொது அறிவு கேள்விகள் கேட்கப்பட்டு, சரியான பதிலளித்த மாணவர்களுக்கு, மூன்று நாட்களும், டேப்லெட், வாட்ச் பரிசாக வழங்கப்பட்டன. அனைத்து கல்வி நிறுவனங்கள் மற்றும் பாடப்பிரிவுகள் குறித்த தகவல்கள் அடங்கிய, தினமலர் நாளிதழின் வழிகாட்டி புத்தகம், மாணவர்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டது.
எஸ்.ஏ., இன்ஜி., கல்லுாரி, நியூ பிரின்ஸ் கல்வி குழுமம், முகமது சதக் இன்ஜி., கல்லுாரி, லிம்ரா நிறுவனம் மற்றும் மிடாஸ் ஆர்கிடெக் கல்வி நிறுவனம் ஆகியவை, வழிகாட்டி நிகழ்ச்சியை உடன் வழங்கின. மாணவ, மாணவியரின் உற்சாக பங்கேற்புடனும், பெற்றோரின் நம்பிக்கையுடனும், நேற்றுடன் இந்த நிகழ்ச்சி இனிதே நிறைவடைந்தது.
