UPDATED : ஏப் 21, 2016 12:00 AM
ADDED : ஏப் 21, 2016 11:13 AM
அரூர்
: அரூர்
அருகே, ஆசிரியர் பணியிட மாற்றம் செய்யப்பட்டதாக வந்த
தகவலையடுத்து, பள்ளி மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு
போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்த வேப்பநத்தம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், 136 மாணவ,மாணவியர் படித்து வருகின்றனர். இங்கு தலைமையாசிரியர் ராஜேந்திரன், இரு ஆசிரியைகள் உட்பட, மொத்தம், ஆறு ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு, இப்பள்ளியில் ஆங்கில ஆசிரியராக பணிபுரியும் காந்தி என்பவர், திடீரென பணியிட மாற்றம் செய்யப்பட்டதாக தகவல் வெளியானது. இதனால், அதிர்ச்சி அடைந்த பள்ளி மாணவ, மாணவியர் மற்றும் அவர்களது பெற்றோர்கள், ஆங்கில ஆசிரியர் காந்தி பணியிட மாற்றம் செய்யப்பட்டதற்கு, எதிர்ப்பு தெரிவித்தனர்.
அவர் தொடர்ந்து இதே பள்ளியில் பணிபுரிய
வேண்டும் என வலியுறுத்தி, நேற்று காலை வகுப்புகளை புறக்கணித்து,
பள்ளி முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால்
அப்பகுதியில், இரண்டு மணி நேரம் பரபரப்பு நிலவியது.
இதுகுறித்து,
அரூர் உதவி தொடக்க கல்வி அலுவலர் மேரி
சகாயராணியிடம் கேட்ட போது அவர் கூறியதாவது:
ஆங்கில ஆசிரியர் காந்தி பணியிட மாற்றம் செய்யப்பட்டதாக வெளியான தகவல் தவறானது என விளக்கி கூறியதையடுத்து, மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டனர். பள்ளி தலைமையாசிரியர் ராஜேந்திரனுக்கும், ஆசிரியர் காந்திக்கும் இடையே பிரச்னை இருந்து வந்துள்ளது. இதுகுறித்து இருவருக்கும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
