சான்றிதழ்களில் ஜாதி, மதம்; அரசாணையின் நிலை தெரிவிக்க உத்தரவு
சான்றிதழ்களில் ஜாதி, மதம்; அரசாணையின் நிலை தெரிவிக்க உத்தரவு
UPDATED : மே 27, 2016 12:00 AM
ADDED : மே 27, 2016 11:28 AM
சென்னை
: பள்ளி சான்றிதழ்களில், ஜாதி, மதத்தை குறிப்பிடும்படி நிர்பந்திக்க வேண்டாம் என, கல்வி நிறுவனங்களுக்கு அறிவுறுத்தி,
2000ம் ஆண்டில் பிறப்பிக்கப்பட்ட அரசாணையை
அமல்படுத்தியது குறித்து, அரசின் கருத்தை அறிந்து
தெரிவிக்கும்படி, தமிழக அரசின் சிறப்பு பிளீடருக்கு,
சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை, வில்லிவாக்கத்தைச் சேர்ந்த எழுத்தாளர் பாலகிருஷ்ணன் தாக்கல் செய்த மனுசமூக நீதிக்கு முன்னோடி மாநிலமான தமிழகத்தில், 1973 ஜூலை, 2ல் பிறப்பிக்கப்பட்ட அரசாணையில், பள்ளிகளில், மாணவர் சேர்க்கையின் போது, ஜாதி, மதத்தை குறிப்பிட விரும்பாதவர்களிடம் அதை தெரிவிக்கும்படி வற்புறுத்த வேண்டாம்; மாற்றுச் சான்றிதழ்களில் ஜாதி, மதத்தை குறிப்பிட வேண்டாம் எனக் கூறப்பட்டிருந்தது.
இந்த அரசாணை விளம்பரப்படுத்தப்படாததால், அதை மக்கள் அறிந்திருக்கவில்லை. பின், 2000ம் ஆண்டு ஜூலை, 31ல், இந்த அரசாணையை அமல்படுத்துவது சம்பந்தமாக மற்றொரு அரசாணை பிறப்பிக்கப்பட்டது. இருந்தும், அதுப்பற்றியும் பலருக்கு தெரியவில்லை.
இதனால், அரசு மற்றும் தனியார் பள்ளிகள், மாணவர் சேர்க்கையின் போது ஜாதி, மதத்தை குறிப்பிடும்படி நிர்பந்திக்கின்றன. எனவே, பள்ளி மாற்றுச் சான்றிதழ்களில், ஜாதி, மதத்தை குறிப்பிடக் கூடாது என உத்தரவிட வேண்டும். இதுகுறித்த அரசாணையை அமல்படுத்த உத்தரவிட வேண்டும். இவ்வாறு அதில் கோரப்பட்டது.இந்த மனுவை, நீதிபதி சத்தியநாராயணன், நீதிபதி முரளிதரன் அடங்கிய அமர்வு விசாரித்தது.
மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சத்தியசந்திரன், இடஒதுக்கீட்டு சலுகைகளைப் பெற விரும்புகிறவர்களிடம் மட்டும், ஜாதிச் சான்றிதழ்களை பெறலாம்; மற்றவர்களிடம் ஜாதி, மத விவரங்களைப் பெற வேண்டிய அவசியமில்லை, என, வாதிட்டார்.
அரசாணையை அமல்படுத்தியது குறித்து அரசின் கருத்தை அறிந்து தெரிவிக்க வேண்டும் என, அரசு சிறப்பு பிளீடர் ஜெயபிரகாஷ் நாராயணனுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை ஜூன், 15க்கு தள்ளி வைத்தனர்.
