சென்னை பல்கலை துணைவேந்தர் தேர்வுக்குழு உறுப்பினர் தேர்வு
சென்னை பல்கலை துணைவேந்தர் தேர்வுக்குழு உறுப்பினர் தேர்வு
UPDATED : ஜூலை 22, 2009 12:00 AM
ADDED : ஜூலை 22, 2009 11:46 AM
சென்னை: சென்னை பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தரை தேர்வு செய்வதற்கான குழுவின் செனட் பிரதிநிதியாக, தமிழ்நாடு மாநில உயர்கல்வி மன்ற துணைத் தலைவர் ராமசாமி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர் ராமச்சந்திரனின் பதவிக்காலம், செப்டம்பர் 5ம் தேதியுடன் முடிகிறது. பல்கலைக்கழக செனட், சிண்டிகேட் பிரதிநிதிகள் மற்றும் கவர்னர் பிரதிநிதி ஆகிய மூவர் குழு புதிய துணைவேந்தர் பதவிக்கு மூன்று பெயர்களை கொண்ட பட்டியலை தேர்வு செய்து கவர்னரிடம் வழங்கும்.
அப்பட்டியலில் இருந்து ஒருவரை சென்னை பல்கலைக்கழக புதிய துணைவேந்தராக கவர்னர் நியமிப்பார். சென்னை பல்கலைக்கழக சிறப்பு செனட் கூட்டம் ஜூலை 21ம் தேதி நடந்தது. கூட்டத்திற்கு தலைமையேற்ற துணைவேந்தர் ராமச்சந்திரன், “புது துணைவேந்தர் தேர்வுக் குழுவின் செனட் பிரதிநிதி இக்கூட்டத்தில் தேர்வு செய்யப்படுவார். சென்னை பல்கலைக் கழக செனட், சிண்டிகேட், கல்விக் குழுவை சேராத ஒருவர் பெயரை செனட் பிரதிநிதியாக நியமிக்க முன்மொழியலாம்,” என அறிவித்தார்.
இதை தொடர்ந்து, சென்னை பல்கலைக்கழக குற்றவியல் துறைத் தலைவர் திலகராஜ், மேலாண்மைத் துறைத் தலைவர் சீனிவாசன் ஆகியோர், தமிழ் நாடு மாநில உயர்கல்வி மன்ற துணைத் தலைவர் ராமசாமியை, செனட் பிரதிநிதியாக தேர்வு செய்ய முன்மொழிந்தனர்.
அப்போது குறுக்கிட்ட சென்னை பல்கலை உயிர் இயற்பியல் துறை ஓய்வு பெற்ற தலைவர் சண்முகம், “ராமசாமி அரசு பதவியில் இருப்பவர். ஏற்கனவே, தமிழ்நாடு மாநில உயர் கல்வி மன்ற உறுப்பினர் செயலர் ராமசாமி, சிண்டிகேட் பிரதிநிதியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
கவர்னரின் பிரதிநிதியும் நியமிக்கப்படவுள்ளார். மன்றத்தின் துணைத் தலைவரை மீண்டும் செனட் பிரதிநிதியாக தேர்வு செய்வதற்கு பதிலாக நடுநிலையாக செயல்படும் கல்வியாளரை இப்பதவிக்கு தேர்வு செய்ய வேண்டும்,” என்றார். அவரது கருத்து புறக்கணிக்கப்பட்டு, தேர்வுக் குழுவின் செனட் பிரதிநிதியாக, தமிழ்நாடு மாநில உயர்கல்வி மன்ற துணைத் தலைவர் ராமசாமி தேர்வு செய்யப்பட்டார்.
தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழக துணைவேந்தரை தேர்வு செய்த குழுவில், ராமசாமி மற்றும் பாஸ்கரன் இடம்பெற்றிருந் தனர். சென்னை பல்கலை, திருவள்ளுவர் பல்கலை, பாரதியார் பல்கலைகளுக்கு புது துணைவேந்தரை தேர்வு செய்யும் குழுவில் பாஸ்கரன் இடம்பெற்றுள்ளார். தற்போது, சென்னை பல்கலை புது துணைவேந்தர் தேர்வுக் குழுவில் ராமசாமி மீண்டும் இடம்பெற்றிருப்பது கல்வித் துறையில் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.
துணைவேந்தர்கள் தேர்வில் அரசின் தலையீடு அதிகளவில் இருப்பதாகவும், நடுநிலையான மூத்த கல்வியாளர்கள் இத்தேர்வுக்குழுவில் இடம்பெறுவதில்லை என்றும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
