தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/சொற்கள் வளர்ந்தால் தான் மொழி வளரும்: கவிஞர் வைரமுத்து

சொற்கள் வளர்ந்தால் தான் மொழி வளரும்: கவிஞர் வைரமுத்து

சொற்கள் வளர்ந்தால் தான் மொழி வளரும்: கவிஞர் வைரமுத்து


UPDATED : ஜூலை 24, 2009 12:00 AM

ADDED : ஜூலை 24, 2009 11:49 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 24, 2009 12:00 AM ADDED : ஜூலை 24, 2009 11:49 AM


Follow on Google
அ நிறம் | அளவு


சென்னை:
“மொழி வளர வேண்டுமானால், மொழி பேசும் இனமும், மொழியில் உள்ள சொற்களும் வளர வேண்டும்,” என கவிஞர் வைரமுத்து தெரிவித்தார்.
‘ஆக்ஸ்போர்டு யுனிவர்சிட்டி பிரஸ்’ தயாரித்த ஆங்கிலம் - ஆங்கிலம் - தமிழ் அகராதி வெளியீட்டு விழா சென்னையில் ஜூலை 23ம் தேதி நடந்தது. கவிஞர் வைரமுத்து அகராதியை வெளியிட, முதல் பிரதியை தமிழ்ப் பல்கலைக்கழக துணைவேந்தர் ராஜேந்திரன் பெற்றுக் கொண்டார்.
விழாவில் கவிஞர் வைரமுத்து பேசியதாவது:
ஆங்கிலேயர்கள் உள்நாட்டை இணைக்கும் தண்டவாளம், உலகத்தை இணைக்கும் ஆங்கிலம் ஆகிய இரு நல்ல விஷயங்களை நமக்கு விட்டுச் சென்றுள்ளனர். சீனர்களும், ஜப்பானியர்களும் ஆங்கிலத்தை கற்கத் துவங்கியுள்ள நிலையில், இந்தியர்கள் ஆங்கிலத்தை முறைப்படி கற்றதால்தான் அமெரிக்காவில் கம்ப்யூட்டர் துறையில் சிறந்து விளங்குகின்றனர்.
கடந்த 1928ம் ஆண்டு முதலாவது ஆங்கில அகராதி வெளியானபோது, அம்மொழியில் நான்கு லட்சத்து 16 ஆயிரம் சொற்கள் இருந்தன. ஆனால், இன்று 26 எழுத்துக்களை கொண்ட ஆங்கிலத்தில் 10 லட்சம் சொற்கள் உள்ளன. அதே நேரத்தில், 247 எழுத்துக்களை கொண்ட தமிழில் மொத்தம் மூன்று லட்சம் சொற்கள் மட்டுமே உள்ளன. மொழி வளர இனம் வளர வேண்டும்; மொழியில் உள்ள சொற்கள் வளர வேண்டும். புதிய சொற்களை தமிழில் கொண்டு வர தமிழில் உள்ள சொற்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். இவ்வாறு வைரமுத்து பேசினார்.
தமிழ் பல்கலைக்கழக துணைவேந்தர் ராஜேந்திரன் பேசியதாவது:
அகராதி என்ற சொல் திருக்குறளில் இருந்து உருவாகியுள்ளது. 6,500க்கும் மேற்பட்ட மொழிகளில் அதிகம் பேசப்படும் மொழிகள் பட்டியலில் தமிழ் 21வது இடத்தில் உள்ளது. மனிதன் கண்டுபிடித்த கருவிகளில் அதிக ஆற்றல் மிக்கது மொழி தான். தனிப்பட்ட கண்டுபிடிப்பான ஆயுதங்கள், கருவிகளை அடுத்த தலைமுறை தூக்கி எறிந்துவிட்டு, அடுத்த கருவியை உருவாக்குகிறது. ஆனால், சமுதாய கண்டுபிடிப்பான மொழியை மாற்றுவது கடினம். மாற்ற முயற்சிக்கும் போது புதிய சொற்கள் உருவாகின்றன. இவ்வாறு ராஜேந்திரன் பேசினார்.
ஆக்ஸ்போர்டு யுனிவர்சிட்டி பிரஸ் சர்வதேச மேலாண் இயக்குனர் நீல் டம்கின், ஆக்ஸ்போர்டு யுனிவர்சிட்டி பிரஸ் இந்திய மேலாண் இயக்குனர் மன்சர் கான், சென்னை அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் மன்னர் ஜவகர், அகராதியின் ஆசிரியர் முருகன், ஆலோசகர் ஜெயதேவன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us