UPDATED : ஜூலை 24, 2009 12:00 AM
ADDED : ஜூலை 24, 2009 04:40 PM
சென்னை: செயின்ட் ஜான்ஸ் கல்விக் குழுமம், நிறுவனர் தினத்தையொட்டி ‘தரமான கல்வி’ என்ற தலைப்பில் சென்னையில் ஜூலை 23ம் தேதி கருத்தரங்கு நடத்தியது. செயின்ட் ஜான்ஸ் சர்வதேச உறைவிடப்பள்ளி முதல்வர் கிஷோர்குமார் வரவேற்றார்.
சென்னைப் பல்கலைக்கழக துணைவேந்தர் ராமச்சந்திரன், கருத்தரங்கை துவக்கி வைத்து பேசியதாவது:
சென்னைப் பல்கலைக்கழகம், மிகப் பெரிய வேலை வாய்ப்பு முகாமை நடத்தியது. அதில், 60 ஆயிரம் மாணவர்கள் பங்கேற்றனர். நான்கு சதவீத மாணவர்கள் மட்டுமே வேலை வாய்ப்பை பெற்றனர். படித்து பட்டம் பெற்றாலும், அதற்கேற்ற அறிவுத் திறனையும், தகவல் தொடர்பு திறனையும் பெறாதது தான் இதற்கு காரணம். இவ்வாறு துணைவேந்தர் பேசினார்.
சுற்றுலாத்துறை செயலர் இறையன்பு பேசுகையில்,“கல்வியில் ‘குவான்டிட்டி’ அதிகமாகவும், ‘குவாலிட்டி’ குறைவாகவும் இருக்கிறது. கல்வியில், பெண்கள் முக்கிய பங்கு வகித்து வருகின்றனர். தரமான கல்விக்கு தரமான ஆசிரியர்கள், கல்வி நிறுவனத்தில் போதிய உள் கட்டமைப்பு வசதிகள் ஆகியவற்றுடன், மாணவர்களை ஊக்கப்படுத்தி அவர்களின் திறமைகளை வெளிக்கொண்டு வர வேண்டும்,” என்றார்.
கிறிஸ்தவ மத போதகர் பால் தினகரன் பேசுகையில், “கல்வியை ஒழுங்குமுறைப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால், அனைவருக்கும் தரமான கல்வியை வழங்குவதற்காக தன்னாட்சி அதிகாரம் கொண்ட அமைப்பை உருவாக்க வேண்டும்,” என்றார்.
