UPDATED : ஜூலை 24, 2009 12:00 AM
ADDED : ஜூலை 24, 2009 04:46 PM
சென்னை: ‘கல்லூரி வளாகத்திலும், மாணவர் இல்லங்களிலும் ஜாதி சங்கங்களை தடை செய்ய வேண்டும்’ என, தமிழக அரசுக்கு, நீதிபதி சண்முகம் கமிஷன் பரிந்துரை செய்துள்ளது.
சென்னை டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரியில் 2008ம் ஆண்டு நவம்பர் 12ம் தேதி, மாணவர்களின் இரு பிரிவுகளுக்கு இடையே பயங்கர மோதல் வெடித்தது.
அச்சம்பவம் குறித்த நீதிபதி சண்முகம் கமிஷனின் விசாரணை முடிவுகள்:
மாணவர்களிடையே மோதல் நடைபெற இருப்பதை முன்கூட்டியே அறிந்திருந்தும் அதைத் தடுக்க, எஸ்பிளனேடு காவல் நிலைய அதிகாரிகளான அப்போதைய ஏ.சி., நாராயணமூர்த்தி, இன்ஸ்பெக்டர் சேகர் பாபு, எஸ்.ஐ., பெருமாள் ஆகியோர் தவறிவிட்டனர்.
கடமையை செய்யத் தவறிய இவர்கள் மீது உரிய துறை நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். தாங்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காததற்கு, கல்லூரி முதல்வரை இவர்கள் காரணம் காட்டுவதும் ஏற்கத்தக்க தல்ல.
வருங்காலங்களில் இத்தகைய சம்பவங்கள் நடக்காமல் தடுப்பதற்கான வழிமுறைகள்:
சட்டக் கல்லூரிகளில் போதுமான அளவு தனி குடியிருப்பு வளாகம், நூலகம், மாணவர் இல்லம், விளையாட்டு மைதானம், பயிற்சி மையம் ஆகியவற்றை ஏற்படுத்த வேண்டும். பெங்களூரு உள்ளிட்ட ஏழு இந்திய சட்டக் கல்லூரிகளைப் போல, சட்டக் கல்வியை தொழில் கல்வியாக மாற்றுவதற்கான, மாதிரி சட்டப் பள்ளியை அரசு துவங்கலாம்.
சட்ட மேற்படிப்பு ஆய்வு மையம், பயிற்சி நிறுவனம் ஆகியவற்றை ஐகோர்ட் வளாகத்தில் அமைக்கலாம். இதனால், சட்டத்தின் பல்வேறு பிரிவுகளில் வல்லு<னர்களாக விளங்கும் ஐகோர்ட் வக்கீல்களின் சேவையை மாணவர்கள் பயன்படுத்திக்கொள்ளலாம். தாம்பரம், திருவள்ளூர், எண்ணூர் அல்லது பூந்தமல்லி போன்ற இடங்களில் மூன்று சட்டக் கல்லூரிகளை ஏற்படுத்தலாம். டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரியில் உள்ள மாணவர்களை இந்த கல்லூரிகளுக்கும் மாற்றலாம். கெல்லீஸ் மாணவர் இல்லத்தை, சட்ட மேற்படிப்பு மாணவர்களுக்கான இல்லமாக பயன்படுத்தலாம்.
எதிர்காலத்தில் இதுபோன்ற மோதல் சம்பவங்களை தவிர்க்க வழி வகைகள்:
கல்லூரி நிர்வாகம், சட்டக் கல்வி இயக்குனர் ஒருங்கிணைந்து செயல் பட்டு, மாணவர்களுக்கிடையேயான பிரச்னைகளை ஆரம்ப நிலையிலேயே தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கல்லூரியில் விளையாட்டு போட்டிகளை நடத்த வேண்டும். இதன் மூலம் மாணவர்களுக்கிடையே தோழமை உணர்வு வளரும். கல்லூரி வளாத்திலும், மாணவர் இல்லங்களிலும் ஜாதி சங்கங்களை தடை செய்ய வேண்டும்.
ஒழுங்கீனமாக நடந்துகொள்ளும் மாணவர்கள் மீது கல்லூரி நிர்வாகம் விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும். மாணவர் இல்லத்திற்கான புதிய விதிமுறைகளை உருவாக்கி செயல்படுத்த வேண்டும். இவ்வாறு கமிஷன், பரிந்துரைத்துள்ளது. கமிஷனின் பரிந்துரைகளை ஏற்றுக்கொள்வதாக அறிவித்துள்ள தமிழக அரசு, அவற்றை மேல்நடவடிக்கைகளுக்காக சட்டத் துறைக்கு அனுப்பி உள்ளது.
